திருவாரூரில் தாய்க்காக மகன் கட்டிய தாஜ்மஹாலை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த ஷேக்தாவுது – ஜெய்லானிபிவி தம்பதிக்கு அமுர்தீன் என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர். தொழிலதிபரான அமுர்தீன் சென்னையில் வசித்து வரும் நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு தாய் ஜெய்லானி பிவி இயற்கை எய்தினார். அப்போது அமுர்தீன் தனது தாயார் ஜெய்லானி பீவி அம்மையாருக்கு அம்மையப்பன் கிராமத்தில் ஜூம்மா மசூதி அமைக்க வேண்டும் என விரும்பி உள்ளார்.
அப்போது தனது கிராமத்தின் அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தனது தாயார் அஞ்சுகம் அம்மையாருக்கு நினைவிடம் அமைத்து மரியாதை செலுத்தி வருவது போன்று தானும் தனது தாயாரின் மீது கொண்ட பாசத்தால் அவருக்கு நினைவிடத்தை அமைக்க முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, கட்டடத்தை வித்யாசமாக கட்ட முடிவு செய்த அவர், ஆக்ராவில் ஷாஜகான் தனது காதல் மனைவிக்காக தாஜ்மஹால் கட்டியது போன்று தாயாரின் மீது அளவற்ற பாசம் கொண்ட அமுர்தீன்,முகலாய மன்னர் காலத்திய கட்டட பாணியில் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட வெள்ளை பளிங்கு கற்களைக் கொண்டு சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் தாஜ்மகாலை எழுப்பினார்.
இது தென்னகத்தின் தாஜ்மஹால் என அழைக்கப்படுகிறது. கடந்த 2 ஆம் தேதி எளிமையாக திறக்கப்பட்டது. இதில் தாயாருக்கான மசூதியும் பிரம்மாண்ட பள்ளிவாசல் கட்டடமும், மறுபுறம் மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் மதர்ஷா கட்டடமும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆக்ரா சென்று உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை அனைவராலும் பார்க்க முடியாத நிலையில், தென் தமிழகத்தில் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட முதல் கட்டடம் இதுவாகும் . இதனை சாதி மத பேதமின்றி, அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் பார்த்து செல்வதோடு, காதலிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் அது ஆக்ரா. தனது தாய் மீதான அன்பால் மகன் கட்டிய தாஜ்மஹால் அது திருவாரூர் என தாய் மீது கொண்ட அன்பால் தாஜ்மகால் கட்டியுள்ள மகனை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









