காஞ்சிபுரத்தில் இளம் மனைவி இருக்கும் போதே வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்த கணவனை கொன்று விட்டு ஆறு மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் சந்தானம்
(வயது 27). கட்டுமானப் பணியில் டிங்கர் வேலை செய்து வந்தார். முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில், காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வேண்டா (வயது 24) என்ற பெண்ணின் முதல் கணவர் இறந்துவிட இரண்டாவதாக சந்தானத்திற்கு திருமணம் செய்து வைத்தார்கள். வேண்டா ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் சந்தானம் வேலை செய்யும் இடத்தில் மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதை வேண்டா கண்டித்தும் சற்றும் கண்டு கொள்ளாமல் அங்கேயே தங்கி, வேண்டா வீட்டுக்கு வாரத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டும் வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வேண்டா நேற்று காலை குடித்துவிட்டு வந்த சந்தானத்துடன் சண்டை போட்டுள்ளார். அப்போது அம்மிக்கல் தூக்கி அவரது தலையில் போட்டுள்ளார். மேலும் கோபம் அடங்காமல் பக்கத்தில் இருந்த கத்தி எடுத்து சந்தானத்தின் கழுத்தை அறுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சந்ததானம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.
சந்தானம் இறந்ததை உறுதிப்படுத்தி கொண்ட வேண்டா பின்னர் தன்னுடைய புடவை
எடுத்து உத்திரத்தில் கட்டி தனக்கு தானே தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி காவல் துறையினர் இரண்டு பேரின் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.
ம. ஶ்ரீ மரகதம்







