34.4 C
Chennai
May 14, 2024
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

”தகைசால் தமிழர் சங்கரய்யா” – சமரசம் செய்துகொள்ளாத சமகால அரசியல் தலைவர்..!!


ச.அகமது

கட்டுரையாளர்

மாணவர் பருவம் தொடங்கி 100 வயதை கடந்தும் சமரசம் செய்து கொள்ளாத அரசியல் தலைவராக சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கு சங்கரய்யா குறித்து விரிவாக பார்க்கலாம்.

“ சமகால இளைஞர்களே..  உங்கள் சகோதரிகளின் காதலை அங்கீகரியுங்கள். என் குடும்பத்தில் கலப்புத் திருமணங்கள் செய்திருக்கிறோம். எனவேதான் கூறுகிறேன், உங்கள் சகோதரி தனக்கேற்ற ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்துகொள்ள விரும்பினால், நீங்கள் சாதி, மதம் பார்க்காமல், அவருக்காகப் போராடி திருமணத்தை நடத்திவைக்க வேண்டும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதியின் கனவு நனவாக வேண்டும். காந்தி, பெரியார், அம்பேத்கர், சிங்காரவேலர், அயோத்திதாசர், சீனிவாசராவ், ஜீவா போன்ற பல தலைவர்கள், வாழ்நாள் முழுவதும் போராடினார்கள். அத்தகைய தலைவர்கள் வாழ்ந்த மண்ணிலிருந்து கேட்கிறேன், தீண்டாமைக் கொடுமைகளை அனுமதிக்கலாமா?..” என தனது உடந்த குரலில், முதுமையின் விளிம்பில் சங்கரய்யா பேசுயது ஏதோ தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ, உள் அரங்க நிகழ்ச்சியிலோ அல்ல. தனது  95வது வயதில் ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்டக் களத்தில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரைதான் அது.

சமரசமற்ற தலைவர் சங்கரய்யா – போராட்டத்திற்கு ஏது வயது..?

சுதந்திரப் போராட்டம் நாடு முழுவதும் பரவி உச்சக் கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த காலகட்டம் அது. துடிப்பான இளைஞரான சங்கரய்யா அப்போது மதுரை அமெரிக்கன்  கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். கல்லூரியில் மதுரை மாணவர் சங்கத்தை ஆரம்பித்து அதன் செயலாளரானார் சங்கரய்யா. இந்த இயக்கம் ஆங்கிலேய அரசுக்கு எதிராக கல்லூரிகளில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தன. போராட்டக் களத்தை சங்கரய்யா முன்னின்று நடத்தியதால் கல்லூரி நிர்வாகம் அவரை நீக்க முடிவு செய்தது. சங்கரய்யாவிற்கு ஆதராவாக கல்லூரி மாணவர்கள் போராடியதால் அந்த முடிவை வாபஸ் பெற்றது கல்லூரி நிர்வாகம். இதன் பின்னர் சங்கரய்யா தன்னை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்.

சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்றிருந்த காலகட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை அழைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றச் செய்தார் சங்கரய்யா. இதன் விளைவாக, இறுதியாண்டு தேர்வுக்கு, 15 நாட்களுக்கு முன் ஆங்கிலேய அரசால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.  கிட்டத்தட்ட 18 மாதங்கள் சிறையில் கழித்துவிட்டு வெளியே வந்தவர், தொடர்ந்து பாளையங்கோட்டையில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாணவர் பேரணி நடத்தினார். மீண்டும் சிறையில்  அடைக்கப்பட்டவருக்கு ஆதரவாக, தமிழ்நாடு முழுக்க மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மிரண்டுபோன பிரிட்டிஷ் அரசு, சங்கரய்யாவை விடுதலை செய்தது. விடுதலையானதும் மீண்டும் சமரசமில்லாமல் பிரிட்டாஷாருக்கு எதிராக போராடியதால் நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் தான் பெருந்தலைவர் காமராஜருடன் நட்புடன் பழக வாய்ப்புக்கு கிட்டியது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பத்திரிகைகளில் ஆசிரியராக..! :

சுதந்திரத்திற்கு பிறகு சிறையிலிருந்து விடுதலையான சங்கரய்யா தன்னை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ தமிழ் பத்திரிகையான ஜனசக்தியின் முதல் ஆசிரியராக பொறுப்பேற்றார் சங்கரய்யா.

1964-ம் ஆண்டு, கருத்து வேறுபாடு காரணமாக கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து சிலர் வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினர். அவர்களில் மிக முக்கியமானவர் சங்கரய்யா. இதன் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான “தீக்கதிர்” பத்திரிகையின் முதல் பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட்டார் சங்கரய்யா.

முன்னாள் முதல்வர் கருணாநிதி இப்போது இருந்திருந்தால்..?

முன்னாள் முதல்வர்களான கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் ஆகியோரிடம் தோழமையுடன் நட்பு பாராட்டினார் சங்கரய்யா. 1967-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியைப் பிடித்து அண்ணா முதல்வரானார். அப்போதுதான் முதன்முறையாக சங்கரய்யாவும் சட்டமன்றத்தில் நுழைந்தார். அந்தச் சமயத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்னை தீவிரப் போராட்டமாக மாறியிருந்தது. அப்போதைய போக்குவரத்துத்துறை கருணாநிதியை அணுகி பிரச்னைகளைச் சுலபமாகத் தீர்த்துவைத்தார் சங்கரய்யா.

இதேபோல முதல்வராக இருந்த  எம்.ஜி.ஆருக்கு ஆட்சியில் மக்கள் பயன்பெறும் வகையில் பல யோசனைகளை வழங்கியிருக்கிறார் சங்கரய்யா. இதன் காரணமாக “என் ஒருவனுக்கு மட்டும் ஒரு லட்சம் வாக்குகள் இருந்தால், அவை அனைத்தையும் சங்கரய்யாவுக்கே செலுத்துவேன். என்னைப் பல நேரங்களில் வழிநடத்தியவர் அவர்” எனச்  எம்.ஜி.ஆர் சிலாகித்து பேசுவாராம்.

கருணாநிதியுடன் அவரது இறுதி நாட்கள் வரை நட்பு பாராட்டி வந்த சங்கரய்யா அவரது மறைவின் போது `என் பிறந்த நாளை நான்கூட மறந்துவிடுவேன். ஆனால், ஆண்டுதோறும் மறக்காமல் காலை 6 மணிக்கெல்லாம் என்னைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லிவிடுவார் கலைஞர். அவர் உடல் நலிவுற்ற பின்னர் அவரிடமிருந்து அழைப்புகள் வரவில்லை” என்று சொல்லி வருத்தமடைந்துள்ளார் சங்கரய்யா.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading