டி20 உலகக் கோப்பை : இந்தியா – ஜிம்பாப்வேயுடன் இன்று மோதல்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இந்தியா, ஜிம்பாப்வே அணியுடன் மோகிறது.

டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜிம்பாப்வே அணியுடன் மோகிறது. சூப்பா் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த மோசமான தோல்வியே இந்தியாவை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது. எனவே, பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என எந்தவொரு நிலையிலும் செய்யும் சிறு தவறும் அரையிறுதி வாய்ப்பை பாதிக்கும் நெருக்கடியில் இந்தியா உள்ளது.

கடந்த போட்டியில் அக்சர் படேலுக்கு வாய்ப்பு அளிக்காதது தான் தோல்விக்கு காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளதால், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அவர் களம் இறங்கலாம். ஜிம்பாப்வே லீக் சுற்றில் பி பிரிவில் வலுவான ஆஸ்திரேலியா, இலங்கையை வீழ்த்தி முதலிடம் பிடித்து கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீசிடம் 107 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால் இன்று கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.

பேட்டிங்கில் பிரையன் பென்னட் 180 ரன் அடித்து முதுகெலும்பாக உள்ளார். கேப்டன் சிக்கந்தர் ராசா, மருமணி, ரியான் பர்ல் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்ப்பர். பவுலிங்கில் முசரபானி 4 போட்டியில் 11 விக்கெட் எடுத்து 2வது இடத்தில் உள்ளார். பிராட் எவன்ஸ், ரிச்சர்ட் ஙகரவா, சுழலில் கிரேம் க்ரீமர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கலாம். இன்று யார் தோற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற நிலையில் களம் இறங்குகிறது. இந்திய வீரர்கள் நேற்று சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தியா-ஜிம்பாப்வே அணியுடனான போட்டிக்கு முன் மாலை 6 மணிக்கு அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.