டி20 உலக கோப்பை போட்டியில் சூப்பர் 12 தகுதி சுற்றில் இன்று இந்தியா-தென்ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.
8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கான போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இன்று நடக்கும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், அடுத்த ஆட்டத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தையும் வீழ்த்தி தனது பிரிவில் முதலிடத்தில் இருக்கிறது. விராட்கோலி தொடர்ந்து 2 ஆட்டங்களிலும் அரைசதம் விளாசியதுடன் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இதுவரை 989 ரன்கள் (23 ஆட்டங்களில்) குவித்துள்ள விராட்கோலி இன்னும் 28 ரன்கள் எடுத்தால் அதிக ரன் எடுத்தவரான இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனேவின் (1,016 ரன்கள், 33 ஆட்டம்) சாதனையை முறியடிக்க முடியும்.
டி20 உலக கோப்பையை போட்டியை பொறுத்தவரை இரு அணிகளும் 5 முறை சந்தித்துள்ளன. இதில் இந்தியா 4 முறை வென்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா ஒரே ஒரு முறை வெற்றி கண்டு இருக்கிறது. சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொள்ள கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இன்று நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா அணியில், லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்) விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், தினேஷ் கார்த்திக், ஆர்.அஸ்வின், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தென்ஆப்பிரிக்க அணியில், பவுமா (கேப்டன்) குயின்டான் டி காக், ரிலீ ரோசவ், மார்க்ராம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல் அல்லது மார்கோ ஜேன்சன், கேஷவ் மகராஜ், ககிசோ ரபடா, அன்ரிச் நோர்டியா, இங்கிடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.







