தேவர் ஜெயந்தி விழா; மதுரையில் பலத்த பாதுகாப்பு

மதுரையில் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி வருகை தரும் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு மற்றும் விதிமீறல்களை தடுக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது…

மதுரையில் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி வருகை தரும் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு மற்றும் விதிமீறல்களை தடுக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு காலை 7.15 மணிக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ், ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மாலையணிவித்தும், தேவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

பின்பு தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு, திமுக அமைச்சர்கள்
துரைமுருகன், கே.என்.நேரு, ஜ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன்,
தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி, ராஜகண்ணப்பன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

7:30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, உதயகுமார் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர். தொடர்ந்து, 9 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம்; 9:30 மணிக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், 10 மணிக்கு டிடிவி தினகரன், வைகோ, 10:30 மணிக்கு சசிகலா ஆகியோரும் மரியாதை செலுத்த உள்ளனர்.

இதேபோல் தூத்துக்குடியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாதுகாப்பு & விதிமுறைகள்:

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தடுக்கும் நோக்கில் இந்தாண்டு முன்னெச்சரிக்கையாக கூடுதல் சோதனை சாவடிகள், சாலை தடுப்புகள் உள்ளிட்டவை அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மரியாதை செலுத்த வருவோர் வாகனங்களில் சாலை விதிமீறல் செயல்களில் ஈடுபட்டால் அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து அவரது லைசென்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

மரியாதை செலுத்துவதற்கு காவல்துறையில் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும், ஊர்வலமாக வர கூடாது, வாகனங்களில் மது பாட்டில் கொண்டு செல்ல கூடாது, வெடி வெடிக்க கூடாது, கலை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது போன்ற விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

கோரிப்பாளையம் பகுதியில் சிலைக்கு மரியாதை செலுத்த வரும் வாகனங்கள் தவிர பேருந்துகள் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்ததுக்கும், பிற வாகனங்கள் செல்வதற்கும் இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் இன்று இரவு வரை நகருக்குள் நுழைவதற்கு அனுமதி இல்லை.

சிலை அமைந்துள்ள பகுதியை சுற்றி 2 கிமீ சுற்றளவுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள், வியாபாரிகள், மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.