உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 12 ஆட்டங்களில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 184 ரன்களை எடுத்துள்ளது. 185 ரன்கள் இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 4வது சுற்று போட்டியில் இந்திய – வங்கதேச அணிகள் இன்று விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டம் இழந்தார். இதையடுத்து, விராட் கோலி இறங்கினார். விராட் கோலி, கே.எல்.ராகுல் இணை பொறுப்பாக விளையாடியது.
கே.எல். ராகுல் 32 பந்துகள் சந்தித்து 50 ரன்கள் எடுத்தார். அக்ஷர் படேல் 7 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா 5 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் எடுத்தது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி தற்போது களமிறங்கி விளையாடி வருகிறது.
-இரா.நம்பிராஜன்








