ரம்ஜான் பண்டிகை – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருக்குர்ஆன் புனித நூல் அருளப்பட்ட மேன்மைமிகு ரமலான் மாதத்தின் 30 நாட்கள் நோன்பிருந்து ரம்ஜான் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை, எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனைத் தொழுது, ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இறைவன் அனைத்து நலன்களையும் வழங்கிட பிரார்த்திக்கிறேன்.

இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில், உளங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.