டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு 2வது வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், அந்த அணி 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில்…

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், அந்த அணி 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது.

ஒடிஸா மாநிலம், கட்டாக்கில் நடைபெற்ற 2வது டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் இந்திய அணி விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன்னில் ரபடா பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஷாக் கொடுத்தார். இதையடுத்து களம் இறங்கிய ஸ்ரேயஸ் ஐயர், நிதானமாக விளையாடினார். மறுபுறம் இஷான் கிஷனும் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் விளாசி ரன்களை சேர்த்தார்.

7ஆவது ஓவரில் நார்ஜே வீசிய பந்தில் டுஸனிடம் கேட்ச் ஆகி 34 ரன்களில் ஆட்டமிழந்தார் இஷான் கிஷன். இதையடுத்து, கேப்டன் பண்ட் களமிறங்கி, வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அவர் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

அதிரடி வீரர் ஹார்திக் பாண்டியா, அக்ஸர் பட்டேல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்ரேயஸும் 40 ரன்கள் எடுத்திருந்தபோது பிரிடோரியஸ் பந்து வீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

பின்னர் களம் கண்ட தினேஷ் கார்த்திக் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை கவுரமான நிலைக்கு உயர்த்தினார். ஹர்ஷல் படேல், தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவ்வாறாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது.

தென் ஆப்பிரிக்கா அணியில் நார்ட்ஜே அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி தென் ஆப்பிரிக்கா விளையாடியது.

8 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்து தடுமாறியது.
வேகபந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் சுருட்டி எதிரணிக்கு கடும் சவால் அளித்தார்.

பின்னர், கேப்டன் பவுமாவுக்கு 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விக்கெட் கீப்பர் கிளாசன் விளங்கினார். 46 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து அசத்தினார். எனினும், 17ஆவது ஓவரின் கடைசி பந்தில் அவர் ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் களத்தில் நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இவ்வாறாக அந்த அணி 18.2 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கிளாசன் ஆட்டநாயகன் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.