புதிய விதிகளை ஸ்விகி நிறுவனம் அறிமுகப்படுத்தியதால், சென்னை முழுவதும் உள்ள ஸ்விகி ஊழியர்கள் 4வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்விகியில் பணிபுரிபவர்களுக்கு வாரம் ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தற்போது ஸ்விகியின் புதிய நடைமுறையில் இது போன்ற ஊக்கத்தொகைகள் முழுவதுமாக தவிர்க்கப்படுவதாகவும், வேலை பார்க்கும் நேரம் 12 மணி நேரத்தில் இருந்து 16 மணி நேரம் வரை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இருந்த வேலை நேரப்படி 12 மணி நேரம் வேலை செய்தால் வாரம் ரூ.14,500 வரை சம்பளம் கொடுக்கப்பட்டது. ஆனால், புதிய நடைமுறைப்படி தற்போது 16 மணி நேரம் வேலை செய்தால் கூட 12,000 ஆயிரம் ரூபையை தான் பெற முடிகிறது. இதில் ஊழியர்களுக்கான பெட்ரோல் செலவு, உணவு செலவு, வாகன செலவு போக வாரம் 7 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக கிடைக்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், புதிய விதிகளின்படி எவ்வளவு வேலை பார்த்தாலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே சம்பளம் வழங்கப்பட உள்ளதாகவும், மேலும் பழைய நடைமுறையின்படி ஊக்கத் தொகை மற்றும் சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 300க்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏற்கனவே இருந்த வேலை நேரம் மற்றும் ஊதியத்தை வழங்க வேண்டும். ஏற்கனவே இருந்த தினசரி மற்றும் வார ஊக்கத்தொகை முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். புதியதாக கொண்டு வந்துள்ள SLOT BOOKING முறையை மாற்றி, ஏற்கனவே உள்ள SHIFT முறையை கொண்டு வர வேண்டும். பகுதி நேர ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமைகளில் மதிய உணவு வேலையில் பணி செய்ய கட்டாயமாக்கக் கூடாது. RAIN SURGE ஐ ரூ. 10இல் இருந்து ரூ. 20 ஆக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.








