ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமர் மோடி செல்லவுள்ள நிலையில், பிஷ்னா பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய உள்ளாட்சி அமைப்பு தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீருக்கு இன்று செல்கிறார். அங்கிருந்தபடி நாடு முழுவதிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் காணொலிக்காட்சி மூலம் காலை 11.30 மணியளவில் அவர் உரையாற்றவுள்ளதாகவும் பிரதமர் அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் பிராந்தியங்கள் இடையே பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் வகையில் 3,100 கோடி ரூபாய் மதிப்பிட்டில் நிறுவப்பட்ட பனிஹல் – காசிகுண்ட் சுரங்கப் பாதையைத் திறந்து வைக்கவுள்ளார். இதன்பின்னர், 20 ஆயிரம் கோடி ரூபாய மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பிஷ்னாவில் உள்ள லாலியன் கிராமத்தில் உள்ள திறந்தவெளி விவசாய நிலத்தில் குண்டுவெடித்ததாக பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தேகத்திற்கிடமான குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதா? விண்கல் விழுந்துள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.








