தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகம் வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 796 மெகாவாட் மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாநிலத்தில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதாகவும், அதன் மூலம் நேற்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு பிரச்னைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அண்மைச் செய்தி: அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீரென மின்தடை
அதேபோல, நிலைமை மோசமான பிறகு நிலக்கரி வரத்து குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், சீரான மின் விநியோகத்திற்கு திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டிய அவர்,
திமுக அரசின் நடவடிக்கை கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதைப் போல உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். மின் விநியோகத்தில் திமுக அரசின் மெத்தனப்போக்கு கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு பிரச்னைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியிருந்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








