வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.
சேலத்தில் நேற்றிரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அம்மாபேட்டை, ஐந்துரோடு, ஏற்காடு அடிவாரம், ஜங்ஷன் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழைபெய்தது. தாழ்வான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். திடீர் மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல, ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை, பெருந்துறை, கொடுமுடி, பவானி, கோபி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால், வேலை முடிந்து வீட்டிற்கு செல்பவர்கள் சிரமப்பட்டனர்.
அண்மைச் செய்தி: அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீரென மின்தடை
மேலும், கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், மணவாசி, புலியூர், உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கரூர் மாநகர பகுதிகளில் நேற்றிரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை மழை பெய்தது. இந்த மழையால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல, தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பெரியகுளம் அருகே உள்ள கல்லாறு பகுதியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வராகநதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் வராகநதியின் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








