தமிழ்நாடு பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவா, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக பெண் நிர்வாகி ஒருவருடன் தொலைப்பேசியில் உரையாடியபோது அவரை சூர்யா சிவா அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. அவர்கள் இருவரும் பேசியதாக கூறப்பட்ட ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது தொடர்பாக திருப்பூரில் விசாரணை நடத்திய தமிழ்நாடு பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு சூர்யா சிவாவும், அந்த பெண் நிர்வாகியும் ஆஜராகினர். நடந்தவற்றை மறுந்துவிட்டு சுமூகமாக தங்கள் கட்சி பணிகளை தொடர விரும்புவதாக இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதை சூர்யா சிவா ஒப்புக்கொண்டதையடுத்து அவரை 6 மாதத்திற்கு கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இடைநீக்கம் செய்வதாக அண்ணாமலை தமது அறிக்கையில் கூறியிருந்தார்.
இந்நிலையில், பாஜகவிலிருந்து விலகுவதாகவும், பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் அப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் சூர்யா சிவா தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.










