இருப்பிடமற்றவர்கள்?

மொரோக்கோ எல்லையான சியூட்டாவில் கடந்த மாதம் கூட்டம் கூட்டமாக மக்கள் கடலில் நீந்திச்செல்லும் காட்சிகளை நாம் பார்த்திருப்போம். தாங்கள் வாழ்ந்துவந்த ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மொரோக்கோ எல்லையான சியூட்டா வழியாக ஸ்பெயினுக்கு அகதிகளாக செல்ல முயன்றவர்கள்தான்…

மொரோக்கோ எல்லையான சியூட்டாவில் கடந்த மாதம் கூட்டம் கூட்டமாக மக்கள் கடலில் நீந்திச்செல்லும் காட்சிகளை நாம் பார்த்திருப்போம். தாங்கள் வாழ்ந்துவந்த ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மொரோக்கோ எல்லையான சியூட்டா வழியாக ஸ்பெயினுக்கு அகதிகளாக செல்ல முயன்றவர்கள்தான் அவர்கள். வாழ்வதற்கு எல்லாம் இருந்தும் வாழ வழியற்று வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் இவர்களைப்போன்ற மக்களுக்கான ஆதரவினை வெளிப்படுத்தும் தினம்தான் சர்வதேச அகதிகள் தினம்.

1951-ல் ஐக்கிய நாடுகள் நபையின் சர்வதேச அகதி உடன்பாட்டின்படி, இனம், மதம், தேசிய அடையாளம், அரசியல் சார்பு ஆகிய காரணங்களால் சொந்த நாட்டில் வசிக்க முடியாதவர்களும், அங்கு வசிக்க அஞ்சுகிறவர்களும் அகதிகள் ஆகிறார்கள். கடந்த 1967-ம் ஆண்டில் போர் காரணங்களாலும் வன்முறைகளாலும் சொந்த நாட்டிலிருந்து வெளியேறுபவர்களும் அகதிகளாக இணைத்துக்கொள்ளப்படுகிறார்கள். இப்படி நாட்டிற்குள் நுழைபவர்களை அந்த நாடு ஏற்றுக்கொண்டால் அவர்கள் அந்நாட்டின் குடியுரிமையை பெற்றுவிடலாம். ஆனால், 1951 ஐநா உடன்பாட்டில் அங்கம் வகிக்கும் நாடுகள் மட்டுமே அகதிகளை ஏற்றுக்கொள்ள முடியும்.

இப்படி ஒரு நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வரும் மக்கள் சந்திக்கும் கொடுமைகள் சொல்லில் அடங்காதவை. சிரியாவில் ஏற்பட்ட தாக்குதலின்போது, ஐரோப்பிய நாடுகளுக்கு கடல்வழியே பலர் அகதிகளாக பயணித்தனர். அப்போது படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏராளமானோர் சடலமாக கரை ஒதுங்கினர். அப்படி துருக்கி கடற்கரையில் சடலமாக கிடந்த ஆலன் என்ற சிறுவனின் புகைப்படம் உலகையே உலுக்கியது. அந்த புகைப்படம்தான் உலகளவில் அகதிகள் குறித்த விவாதம் எழ துண்டுதலாக அமைந்தது.

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பலர் மியான்மருக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். பின் 1960களில் அங்கு ஏற்பட்ட ராணுவ புரட்சியின்போது, பெரும்பாலான தமிழர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டு தமிழ்நாடு திரும்பினர். அவ்வாறு நாடு திரும்பிய தமிழர்கள் ’பர்மா அகதிகள்’ என அழைக்கப்பட்டனர். தாயகம் திரும்பியவர்கள் என்றாலும், அகதிகள் எனும் பெயர் அவர்களை இன்றும் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. கடல் வழியாக தாயகம் திரும்பியபோது அவர்கள் சந்தித்த அவலங்களை எடுத்துரைக்கும் விதமாக 1952-ம் ஆண்டு வெளிவந்த பராசக்தி திரைப்படத்திலும் பல காட்சிகள் அமைந்திருக்கும். இது மட்டுமின்றி புலம்பெயர்பவர்கள் சந்திக்கும் கொடுமைகளை வெளிப்படுத்திய ப.சிங்காரம் எழுதிய புயலில் ஒரு தோணி உள்ளிட்ட பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கிருந்து பலர் இந்தியாவின் மிசோரம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். மியான்மர் அகதிகளை அனுமதிக்க வேண்டாம் என மிசோரம் மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. எனினும், மியான்மர் அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் கொடுக்கலாம் என மிசோரம் அரசு தெரிவித்துள்ளது. தற்போது 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியான்மர் மக்கள் இந்தியாவில் தஞ்சமடைய அனுமதி வேண்டி காத்திருப்பதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் சிங்கள பேரினவாதத்தின் விளைவாக அங்கு வசித்துவந்த தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாக சென்றனர். 40 ஆண்டு கால போராட்டத்தின் உச்சமாக கடந்த 2009-ம் அண்டு இலங்கையில் இறுதி போர் நடைபெற்றது. அதில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த போர் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அரசியலில் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. ஈழப்படுகொலை குறித்த விசாரணை சர்வதேச அரங்கில் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. போர் முடிந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், அங்கிருந்து மக்கள் புலம்பெயரும் நிலை இன்னும் ஓய்ந்தபாடில்லை. சில தினங்களுக்கு முன் தமிழ்நாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்தித்தபோது கூட ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். மேலும், தமிழ்நாட்டில் முகாம்களுக்கு வெளியே வாழும் அகதிகளின் குடும்பத்தினருக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இது மட்டுமின்றி, ரோஹிங்கியா இஸ்லாமியர்கள், பாலஸ்தீனத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் என உலகம் முழுவதும் பல நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் அகதிகளாக தங்கள் வாழ்க்கை போரை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். உலகம் முழுவதும் சுமார் 8 கோடிக்கும் அதிகமானோர் அகதிகளாக உள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. பரந்துபட்ட இவ்வுலகில் வாழ வழியின்றி தவிக்கும் மக்களை வாழவிடாமல் செய்வது எது என்று யோசிப்பதுதான் சர்வதேச அகதிகள் தினமான இன்று நாம் செய்கிற மிகச்சிறந்த செயலாக இருக்கும்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.