தீபாவளியை முன்னிட்டு சூர்யா நடித்த சீன், சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் 2, ரன்பீர்கபூர், சாய்பல்லவி நடித்த ராமாயணா மற்றும் சசி இயக்கத்தில் ஹரிஷ்கல்யாண் நடித்த ‘நுாறுகோடிவானவில்(ஓடிடியில்) ஆகிய 4 படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ…
சீன்:
கண் பார்வை இழந்த போலீஸ் அதிகாரி சூர்யா, சீரியல் கில்லர் நஸ்லனை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது கதை. ஆவேசம் படத்தை இயக்கிய ஜீத்து மாதவன் இயக்கியுள்ளார். திரில்லர் கலந்த துப்பறியும் கதையாக இருந்தாலும் அதை கொஞ்சம் காமெடி கலந்த டோனில் கொடுத்து இருப்பது படத்தின் ஹைலைட்.

ஆரம்பம் முதல் கடைசிவரை சூர்யாவின் நடிப்பு அருமை. தனக்கு கண்பார்வை இல்லை என அவர் மறைப்பது, மற்றவர்கள் நம்ப அவர் செய்யும் தந்திரங்கள் பல. நஸ்ரியாவை உதவியாளர் ஆக்கி, அவரை தனது கண்ணாக பாவித்து, அவர் சொல்வதை கேட்டு ரோட்டில் நடப்பது, வில்லன் டீமை பிடிக்க சில விஷயங்கள் செய்வது பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது.
இத்தனைக்கும் ’‘நான் போலீஸ் வேலையை ராஜினாமா செய்கிறேன் என சூர்யா சொன்னபிறகு தான் கதை சூடுபிடிக்கிறது’’. ஒரு போலீஸ் அதிகாரியாக பவரில் இல்லாமல், கண்பார்வை இல்லாமல் 100க்கும் அதிகமான கொடூர கொலைகள் செய்த சின்ன பையன் நஸ்லனை அவர் தேடுவது, அவனை லாக் செய்வது, கிளைமாக்சில் வீட்டில் அவனுடன் சண்டை இதெல்லாம் பக்கா ஹீரோயிச மூவ்மென்ட். சீரியல் கில்லர் பாணியில், பார்வையற்றவர் ஹீரோவாக பல படங்கள் வந்திருந்தாலும், தனது மாறுபட்ட திரைக்கதையால் படத்தை வெற்றி ஆக்கியிருக்கிறார் இயக்குனர். சூர்யாவும் அதற்காக உழைத்து, ஒவ்வொரு சீனையும் மெருகேற்றி இருக்கிறார்.

நேரம், திருமணம் எனும் நிக்காஹ், நய்யாண்டி, ராஜாராணி படங்களில் நடித்த நஸ்ரியா, 12 ஆண்டுகளுக்குபின் தமிழில் ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். கண் பார்வையற்ற சூர்யாவுக்கு போனில், நேரில் கமெண்ட் கொடுத்து நடத்துவது அவர்தான். அவரின் கியூட்டான ரியாக் ஷன், சிம்பிளான காஸ்ட்யூம், ஒரு கட்டத்தில் சூர்யாவை காப்பாற்ற போடும் சண்டை, காதல் காட்சிகள் தீபாவளி பட்டாசு. இத்தனை நாட்கள் ஏன் நடிக்கவில்லை என படம் பார்ப்பர்கள் நஸ்ரியாவை பார்த்து கேட்பார்கள். சூர்யா அப்பாவாக, ஞாபகமறதியால் பாதிக்கப்பட்டவராக ஆனந்த்ராஜ், குடிகாரியாக புதுமுகம் ஒருவர் அம்மாவாக வருகிறார். இவர்கள் தங்கள் அனுபவம் காரணம், சூர்யாவின் விசாரணைக்கு உதவுகிறார்கள். அந்த சீன்களும் அமர்களம், அதிலும் ஆனந்த்ராஜ் காமெடி பிரமாதம். நஸ்ரியா அப்பாவாக கஜராஜ், போலீஸ் உயர் அதிகாரியாக லாலும் மனதில் நிற்கிறார்கள். கவரவ வேடத்தில் ஜோதிகாவும், மலையாள நடிகர் டொவினாதாமசும் வந்து அசத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன வேடம் என்பது சஸ்பென்ஸ்.
மலையாளத்தில் பிரபலமான நஸ்லன் இந்த படத்தில் வில்லனாக அறிமுகம் ஆகியிருக்கிறார். அவரின் கேரக்டர் பின்னணி, டயலாக் டெலிவரி, ரொம்பவே இயல்பாக நடிப்பது, கொலைகளை செய்ய பக்காவாக ஸ்கெட்ச்போடுவது கதைக்கு பிளஸ். குறிப்பாக, இடைவேளைக்குபின் அவருக்கும் சூர்யாவுக்குமான சீன்கள், கிளைமாக்சில் அவர் போடும் சண்டைக்காட்சி விசில் அடிக்க வைக்கிறது. கண்பார்வையற்றவர், கொடூர வில்லன் இடையேயான மோதலை அவ்வளவு அழகாக காட்சி படுத்தி இருக்கிறார் இயக்குனர். வில்லன் நஸ்லன் டீமில் வரும் ஒரு பெண், அந்த ஆட்டோகாரர் கேரக்டர் கூட ரசிக்க வைக்கிறது. சூர்யாவை கண்காணிக்கும் 2 இளம் போலீசாக வருபவர்களும் மனதில் நிற்கிறார்கள்.

முதற்பாதியில் கொஞ்சம் ஸ்லோ. இவ்வளவு கொலைகள் நடக்கும்போது போலீஸ் எங்கே? நிஜ வாழ்க்கையில் மாணவர்களுக்கு அவ்வளவு அட்வைஸ் செய்யும் சூர்யா சிகரெட் பிடிக்கும் காட்சியில் அறிமுகமாகி, சிகரெட் பிடித்துக்கொண்டே இருக்கலமா? என பல கேள்விகள் எழுந்தாலும் தீபாவளி படங்களில் சீன் தான் வின்னர். கருப்பு, விஸ்வநாத் அன்ட் சன்ஸ் படங்களுக்குபின் 3வது வெற்றியை பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர். சீரியல் கில்லர் கதையாக இருந்தாலும் ரத்தம், வன்மம், முகம் சுளிக்கும் காட்சிகள் இல்லாமல் காமெடி டோனில், கமர்ஷியலாக பல புது விஷயங்களை சொல்லி பார்வையாளர்களை கவர்ந்து இருக்கிறார் இயக்குனர்.
மூக்குத்தி அம்மன் 2:
மூக்குத்தி அம்மனுக்கும், கெட்ட சக்தி ரெஜினா, அவர் கணவர் துனியா விஜய்க்கும் பகை, சண்டை. அந்த சண்டை முடிவில் அம்மன் கோயிலில் இருந்து வெளியேறுகிறார். ரெஜினா ஜீவசமாதி ஆகிறார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்குபின் கிரகணங்கள் நேர்கோட்டில் சந்திக்கும் ஒரு நாளில் மீண்டும் அவர்கள் சண்டை போடுகிறார்கள். இந்த முறை அம்மனான நயன்தாரா அப்பாவி போலீசாக இருக்கிறார். அவருக்கு தான் யார்? தனது சக்தி என்ன என்பதே தெரியாது. ரெஜினா, மந்திரவாதி கருடாராம், துனியா விஜய், சுனில் ஆகியோர் கொண்ட டீம், வரை அழிக்க நினைக்கிறார்கள். அம்மனுக்கு சக்தி வந்ததா? மீண்டும் கோயிலுக்குள் சென்றாரா? கெட்ட சக்தியை யார் துணை கொண்டு, எப்படி அழிக்கிறார் என்பது சுந்தர்.சி இயக்கிய மூக்குத்தி அம்மன்2 படத்தின் கதை. முதற்பாகத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஒரு சாதாரண போலீசாக இருக்கும் நயன்தாராவுக்கு அடிக்கடி மிரட்டும் கனவுகள் வருகிறது. நீ மைலாஞ்சிக்கு போ என பலரும், பலவிதமாக சொல்கிறார்கள். அதன்படி மைலாஞ்சி போலீஸ் ஸ்டேஷன் மாற்றலாகி போகிறார். அந்த சமயத்தில் ஒரு பழைய கோயிலை ஊர் மக்கள் கண்டெடுத்து, அதை புதுப்பிக்கிறார்கள். ஜீவ சமாதியாக இருக்கும் ரெஜினாவை எழுப்புகிறார் மந்திரவாதி சுனில், இந்த பிறவியில் கெட்ட அரசியல்வாதியாக இருக்கும் துனியா விஜயை அவர் கண்டுபிடித்து, மூக்குத்தி அம்மனை அழிக்க ப்ளான் போட என்ன நடக்கிறது என கதை நகர்கிறது. அப்பாவி போலீசாக, அம்மனாக வருகிறார் நயன்தாரா. போலீஸ் கேரக்டர், அந்த பயம் ஓகே. அம்மனாக அமர்களமாக இருக்கிறார். பாம்புகளை படிகட்டாக மாற்றி அவர் நகரும் சீன், சீங்கம் மேல் உட்கார்ந்து இருப்பது, இரண்டு குழந்தைகளை காப்பாற்றுவது, கிளைமாக்ஸ் பைட் என பல இடங்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார். அம்மன் கேரக்டர், கெட்அப்பின் இன்னும் நன்றாக நடித்து இருக்கலாம். பல நேரங்களில் சீரியஸ் ஆன முகத்துடன் இருக்கிறார். முகற்பாகத்தில் இருந்த எனர்ஜி மிஸ்சிங்.

வில்லியாக வரும் ரெஜினாவுக்கு மாறுபட்ட கேரக்டர், கெட்அப், அவரும் அதில் ஹாலிவுட் பாணி வில்லி மாதிரி மிரட்டியிருக்கிறார் குறிப்பாக, பழிவாங்க நினைக்கும், சண்டைக்காட்சிகளில் கோபத்தில் கொதிக்கிறார். அவர் கணவராக வரும் துனியாவுக்கும் டெரர் வில்லன் கேரக்டர், என்ன, அந்த காட்சிகளை குறைத்து இருக்கலாம். இவர்களை தவிர, நயன்தாரா அம்மாவாக வரும் ஊர்வசி தனது காமெடியால், பேச்சால் கவர்கிறார். பண்ணையாராக வரும் யோகிபாபுவின் அறிமுககாட்சி, திருமணம் சம்பந்தப்பட்ட காட்சிகள் கலகலப்பு. சுந்தர். சி படங்களில் வரும விச்சு, வேங்கட் ராகவன், கவுரவ வேடத்தில் வரும் இனியா ஆகியோர் நடிப்பு ஓகே. ஹிப்ஹாப் ஆதி இசை செட்டாகி இருக்கிறது.

படத்தின் பிளஸ் என்றால் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகள். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மிரட்டல். அந்த சண்டையில் மூக்குத்தி அம்மன் சகோதரிகளான குஷ்பு, சினேகாவும் இணைந்து ஆட, எதிரிகளை அழிக்க, தியேட்டரே ஆடுகிறது. அதேபோல், அம்மன் பிளாஷ்பேக் காட்சிகளும், நயன்தாராவின் போலீஸ் காட்சிகளும் படத்துக்து பிளஸ். என்ன படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம். முதற்பாதியில் இன்னும் புது விஷயங்களை சேர்த்து விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம். ஆனாலும், அம்மன் படங்கள் என்றால் மூக்குத்தி அம்மனும் நினைவுக்கு வருவார்.
ராமாயணா:
ராமாயணம் பின்னணியில் எத்தையோ படங்கள் வந்துவிட்டன. நிதேஷ்திவாரி இயக்கத்தில் ரன்பீர்கபூர், சாய்பல்லவி, யஷ் நடித்த இந்த ராமாயணா கதை, பிரமாண்டத்தின் உச்சம். 3டியில் மிரட்டலாக வந்து இருக்கிறது.
ராவணன் எப்படி பவர்புல்லாக மாறினான், இந்திரன், மற்ற அரசர்களுடன் அவன் போட்ட கடுமையான சண்டை, வெற்றி என கதை ஆரம்பிக்கிறது. அந்த காட்சிகளே அவ்வளவு அசத்தல். அந்த போர்க்களம், அதிரடி சண்டை அதிர வைக்கிறது. ராவணனாக வரும் யஷ் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். விஸ்வாமித்ர முனிவர் யாகத்தை காப்பாற்ற ராமர், லட்சுமணர் செல்வதில் இருந்து ரன்பீர்கபூர், துபே கேரக்டர்கள் அறிமுகம் ஆகின்றன. உண்மையில் ராமர் வேடத்துக்கு பக்காவாக பொருந்தி இருக்கிறார் ரன்பீர். அவரின் சாந்தமான முகம், அமைதியான பேச்சு, அவர் கொடுக்கிற விளக்கம். குறிப்பாக, வில்வீரனாக பறந்து, பறந்து சண்டைபோடுவது, அரக்கர்களை அழிப்பது ராம பக்தர்களுக்கு ரொம்ப பிடிக்கும். சீதைக்கும் அவருக்குமான சீன்கள், வனவாசம் செல்ல புறப்படும் சீன்கள் செம. லட்சுமணனாக வரும் துபே கொஞ்சம் காமெடி பண்ணியிருக்கிறார். அதேபோல் சீதையாக வரும் சாய்பல்லவியும் சிறப்பாக நடித்து இருக்கிறார். அவருக்கும் சண்டைக்காட்சிகள் இருப்பது இந்த ராமாயணத்தில் புதுமை.

இவர்களை தவிர, ஜடாயு, தசரதர், அவர்கள் 3 மனைவிகள் கேரக்டர்கள் கதைக்கு பக்காவாக பொருந்தி இருக்கிறது. சூர்ப்பனையாக வருகிறார் ரகுல்ப்ரீத் சிங். அவர் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் அவ்வளவு கலர்புல். தனக்கு மூக்கு அறுபட, அவர் பொங்குவதும் சிறப்பு. ராவணனாக வரும் யஷ் தோற்றம், அவரின் கோபம், நடிப்பு, சண்டைக்காட்சிகள் படத்துக்கு பெரிய பிளஸ். ஒரு காட்சியி்ல் அவர் பத்து தலைகளுடன் வந்து பேசும் வசனம் பிரமாதம். யஷ் கம்பீரமான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். சீதையை இலங்கைக்கு ராவணன் கடத்தி செல்ல, அவரை மீட்பேன் என ராமர் சபதம் எடுப்பதுடன் இந்த பாகம் முடிந்துவிடுகிறது. ஏ.ஆர்.ரகுமான், ஹம்மர் இணைந்து கொடுத்த இசை, பாடல்கள் உலகத்தரமானவை. தமிழ் டப்பிங் கூட பக்காவாக பொருந்தி இருக்கிறது.

4 ஆயிரம் கோடி செலவில், 2 பாகங்களை எடுத்து இருக்கிறார்கள். முதற்பாகத்தில் ராவணன் போர், அரக்கர்களை ராம, லட்சுமணர் அழிக்கும் காட்சிகள், மிதிலையில் சுயம்பரம், அயோத்திக்கு ராமர், சீதை வருகை, வனவாசம் செலுத்தல், அங்கே சூர்ப்பனகை படையுடன் நடக்கும் சண்டை ஆகியவை விஷூவல் விருந்து, அதிலும் சீதையை ராவணன் கடத்தி செல்லும்போது அந்த புஷ்பக விமானத்தில் ஜடாயு போடும் சண்டைகாட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. கிராபிக்ஸ், ஆர்ட், காஸ்ட்யூமில் அந்த காலத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள். சில இடங்களில் கொஞ்சம் காட்சிகள் மெதுவாக நகர்கிறது. சில இடங்களில் டயலாக் நீளம் அதிகம். ஆனாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ராமாயணத்தை ரசிக்கலாம். ஹாலிவுட் படங்கள் மாதிரி பிரமாண்டம், கிராபிக்ஸ் என தொழில்நுட்பத்தில் மிரட்டியிருக்கிறார்கள்
நுாறு கோடி வானவில்:
சசி இயக்கத்தில் ஹரீஷ்கல்யாண், சித்திஇத்னானி நடித்த இந்த படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகிவிட்டது. தியேட்டரில் வரவில்லை. மும்பையில் வசிக்கும் ஹரீஷ்கல்யாண் ஒரு நிகழ்ச்சி தயாரிப்புக்காக கோவா வருகிறார். சித்திஇத்னானியை பார்த்தவுடன் அவரை வைத்து அந்த நிகழ்ச்சியை தயாரிக்க ஆசைப்படுகிறார். பணத்தேவை மற்றும் சூழ்நிலை காரணமாக அவரும் ஓகே சொல்கிறார். படப்பிடிப்பு சமயத்தில் இருவருக்கும் காதல் மலர்கிறது. ஆனால், சித்தி இத்னானிக்கு ஒரு காதலன் கோமாவில் இருக்கிறான். அவனும் ஒரு கட்டத்தில் உடல் நலம் பெற்று எழுந்து வர, என்ன நடக்கிறது. எந்த காதல் ஜெயிக்கிறது என்பது கதை.

பல அழுத்தமான கதைகளை கொடுத்த சசி, இதில் காதலை புது கோணத்தில் சொல்லியிருக்கிறார். டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளராக வரும் ஹரீஷ்கல்யாண் நடிப்பு ஓகே. அப்பாவுடன் சண்டை, சித்தி இத்னானியுடன் பிரிவு, காதல் காட்சிகளில் மனதில் நிற்கிறார். படத்தின் பெரிய பிளஸ் சித்திஇத்னானிதான். கோவா கேர்ள் ஆக அவர் அறிமுகம் ஆகும் விதம், அவரின் குறும்புதனமான நடவடிக்கைகள், ஹரீஷ் கல்யாணுடன் சண்டை, பின்னர் நட்பு, காதல், பிரிவு சீன்களில் கலக்கியிருக்கிறார். கிளைமாக்சில் மும்பை போய் அவர் தவிப்பது, சில முடிவுகளை எடுப்பது சூப்பர்.
ஹரீஷ்கல்யாண் டீமில் கேமராஉமனாக வரும் விஜே பார்வதியின் டயலாக், சில சீன்கள் ரசிக்க வைக்கின்றன. சின்னிஜெயந்த், கோவை சரளா, சம்பத் என பலர் இருந்தும் மனதில் ஒட்டவில்லை. படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட சீன்கள் போராடிக்கிறது. காதல், 2 காதலன், ஆபரேஷன் இதெல்லாம் பார்த்து புளித்தது. கோவா, மும்பை காட்சிகள் கலர்புல். சித்துகுமாரின் சாங் யூத்புல். காதலை இப்படி பல படங்களில் சொன்னதும், சில நீளமான காட்சிகளும் படத்தின் மைனஸ். சசி படங்களில் கிளைமாக்ஸ் புதுசாக இருக்கும். அதுவும் இதில் இல்லை. ஆனாலும் ஒரு காதல் கதையை டீசண்ட்டாக கொடுத்து இருக்கிறார் சசி.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்




