நடிக்கவும் தெரியவில்லை, வசனங்களையும் உச்சரிக்கத் தெரியவில்லை என தன்மேல் விழுந்த அனைத்து விமர்சனங்களையும் கேட்டுக்கொண்டே சரவணன் செதுக்கிய ஒரு சிற்பம் தான் சூர்யா.தன் தந்தை சிவக்குமார் திரையுலகில் மார்கண்டேயன் என புகழப்பட்டாலும் சற்றும் அத்துறையில் நாட்டம் காட்டாமல் இருந்தார் சரவணன். மற்ற திரைப் பிரபலங்களின் வாரிசுகள் போல் இல்லாமல் இவர் அனைவரையும் போல் சாதாரண வாழ்கையையே வாழ்ந்து வந்தார். வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற சூர்யா (எ) சரவணன், ஆடை தயாரிப்புத் தொழிற்துறையின் மேல் இருந்த ஆர்வத்தால் தான் ஒரு முன்னணி நடிகரின் மகனென்ற அடையாளத்தை வெளிக்காட்டாமல், ஒரு தனியார் தொழிற்சாலையில் மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
சுமார் ஆறு மாதங்கள் அங்கு பணியாற்றி வந்த அவரை, இயக்குநர் வசந்த் அவரின் அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்யவே, தனது 22 வயதில் விஜயுடன் இணைந்து நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இத்திரைப்படத்தைத் தயாரித்த இயக்குநர் மணிரத்னம், சரவணனுக்கு சூர்யா எனச் சூட்டினார். எந்தவொரு திரையுலக முன்னனுபவமும் இல்லாமல் திரையுலகில் காலடி வைத்த சூர்யாவுக்கு ஆரம்பத்தில் நடித்த படங்கள் அவருக்குப் பெரிதாக வாக்கெடுக்கவில்லை.
வெற்றிப்படம் என்று செல்லும் அளவுக்குக் கையில் எந்த படமும் இல்லாது தவித்த சூர்யாவின் திரைப் பயணத்தை அடுத்த தளத்திற்கு அழைத்துச் சென்ற படம் தான் 2001ல் பாலாவின் இயக்கத்தில் வெளியான நந்தா. சூர்யாவுக்கு இந்த படத்தின் மூலம் பாலாவின் பட்டறையில் தனது நடிப்புத் திறமையை வெளிக்கொணரும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திச் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது மற்றும் பிலிம்பேர் விருதுகளை வென்றார்.
அதன் பிறகு இயக்குநர் கவுதம் மேனனுடன் கைகோர்த்த சூர்யா, தமிழ் சினிமா இது வரை பார்க்காத நேர்த்தியான போலீஸ் கதாபாத்திரத்தை தன் நடிப்பின் மூலம் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். இப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பிதாமகன், கஜினி என தனது நடிப்பில் வித்தியாச பரிமாணங்களை வெளிப்படுத்தினார். நடிப்பு மட்டுமல்லாமல் நடனம், சண்டைக் காட்சிகள், ரொமான்ஸ் என ஒரு முழுமையான ஹீரோ மெட்டிரியலாகவே தன்னை வளர்த்துக்கொண்டு குறுகிய காலத்திலேயே திரைத்துறைக்குத் தேவையான அனைத்து திறமைகளையும் வளர்த்துக் கொண்டு தற்போது ஓர் தலைசிறந்த நடிகராக உருவெடுத்துள்ளார்.
இந்த நேரத்தில்தான் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உயிரிலே கலந்தது’, ‘காக்க காக்க’, ‘பேரழகன்’, ‘மாயாவி’, ‘ஜூன் ஆர்’ மற்றும் ‘சில்லுனு ஒரு காதல்’ போன்ற படங்களில் சூர்யாவுடன் இணைந்து நடித்தார் ஜோதிகா. இப்படங்களில் நடிக்கும்போதே அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.
திரையிலிருந்த இவர்களின் கெமிஸ்ட்ரியை ரசித்த ரசிகர்கள் எப்போது இவர்கள் நிஜ வாழ்கையில் இணைவார்கள் என்ற ஆவலில் காத்திருந்தனர். பெற்றோரின் சம்மதத்திற்காகக் காத்திருந்த இவர்கள், 2006 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். சூர்யா – ஜோதிகா இணையருக்கு தியா மற்றும் தேவ் என இரு குழந்தைகள். வெறும் நடிகராக மட்டும் தன்னை சுருக்கிக் கொள்ளாமல் தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் மன்மதன் அம்பு,கோ, அவன் இவன் போன்ற படங்களில் கௌரவத் தோற்றத்திலும் நடித்திருக்கிறார்.மேலும் கவுதமுடன் வாரணம் ஆயிரம் படத்தின் ,மூலம் மற்றொரு முறை இணைந்த சூர்யா இந்த முறை, தமிழ் திரையுலக கதாநாயகர்கள் செய்யத் தயங்கும் ஒரு முயற்சியைக் கையில் எடுத்தார். ‘வாரணம் ஆயிரம்’ படத்திற்காகக் கடுமையான உடற்பயிற்சி இறங்கிய சூர்யா தனது எடையைக் குறைத்து, ‘சிக்ஸ் பேக்ஸ்’ என்ற உடலமைப்பைத் தமிழ்த் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். அந்த படத்துடன் நின்றுவிடாமல் இன்றளவும் வளர்ந்து வரும் பல் கதாநாயகர்களுக்கு முன்னுதாரணமாக இன்றுவரை தனது உடல் அமைப்பை அப்படியே பேணிப் பராமரித்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நடிப்பைப் போலவே அனைத்திலும் நேர்த்தியை எதிர்பார்க்கும் சூர்யா தந்து படத்தின் சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் தானே அதில் நடிக்கவே விரும்புவார். அந்த வகையில் அயன், ஆதவன் உள்ளிட்ட படங்களில் இடம்பெற்றுள்ள மிகவும் சவாலான சண்டைக்காட்சிகளைத் தானே செய்து முடித்திருப்பார். குறிப்பாக இவரின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற அயன் படத்தில் இடம் பெற்றிருக்கும் சண்டைக் காட்சிகள் இன்றளவும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
கடந்த ஜூலை மாதத்தில் 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சூரரைப் போற்று படத்தில் நடித்தற்காகச் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்பட்டது. ஒடிடி யில் வெளியான இந்த படம் சூரிய ஒரு மாபெரும் நடிகன் என்பதை மீண்டும் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கும் உணர்த்தியது.மேலும் இதைத்தொடர்ந்து வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம்பெற்றது. வெறும் வணிகம் வெற்றிக்காகப் படம் நடிக்காமல் சமூகப் பொறுப்போடும் இவர் நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் இவரை ஆஸ்கார் வரை கொண்டு சென்றது.
படங்களில் மட்டும் தனது சமூகப் பொறுப்பைக் காட்டாமல், சூர்யா தனது ‘அகரம் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில், பாதியிலே பள்ளிப்படிப்பை விட்ட ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகத் தொடர்ந்து பல உதவிகளைச் செய்து வருகிறார்.
லாப நோக்கமற்ற இவரது செயல்களால் நூற்றுக்கணக்கான ஏழைக் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இப்படிப் பல பரிமாணங்களில் இயங்கிவரும் சூர்யா திரைத்துறைக்கு வந்து இன்றோடு 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.இந்த மாபெரும் சாதனை பயணத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.