குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று இரவு நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். தசரா திருவிழாவின் 9-ம் நாளான நேற்று (திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு அன்னவாகனத்தில் கலைமகள் கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிகின்றனர்.
விழாவையொட்டி குலசேகரன்பட்டினம் புறநகரில் 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட எஸ்பி சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில், சுமார் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.







