புகைப்பிடிக்கும் வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சுபம் அவஸ்தி, சப்தரிஷி மிஸ்ரா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாவது, ஆரோக்கியமாக வாழ்வதற்கான உரிமைக்கு எதிரானது என்றும், உணவகங்கள், கிளப்புகள், ஏர்போர்ட் போன்ற மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் சிகரெட் பிடிப்பவர்களால் சிறுவர்கள் தூண்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம் அதிகமாவதால், இதய பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகமாவதாக கடந்த 2018ல் தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், இதன் காரணமாக இந்தியாவில் 90 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக அளவில் 16-64 வயதுள்ளவர்கள் சிகரெட் பிடிப்பதில் உலகில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், இதன் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.56.7 கோடி சுகாதார செலவு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே, உணவகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு அருகேயும், கல்வி நிலையங்களுக்கு அருகேயும் புகைப் பிடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், புகைப்பிடிக்கும் வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரி இருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, நல்ல நோக்கத்தை விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கோடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியது. மேலும், விளம்பரத்திற்காக இதுபோன்ற பொதுநல வழக்குகளை தொடுக்காதீர்கள் என்றும் கூறி, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.









