சாலை பாதுகாப்பு குறித்த புதிய விதிகளை உருவாக்க வேண்டும் : மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

சாலை பாதுகாப்பு குறித்த புதிய விதிகளை 6 மாதங்களில் உருவாக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகில் வாகன நெரிசல் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று இந்தியா. ஆண்டுதோறும் பலர்  சாலை விபத்துக்கள் உயிரிழக்கின்றனர். இதனை தொடர்ந்து  கடந்த 2012ம் ஆண்டு சாலை விபத்துகளால் நிகழும் உயிரிழப்பு குறித்து வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

13 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  மோட்டார் வாகன சட்டம் 1988-ன் படி பிரிவு 138(1A) மற்றும் 210D உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், மோட்டார் பொருத்தப்படாத வாகனங்களான சைக்கிள் , கை வண்டி உள்ளிட்டவற்றின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தவும், சாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பை கண்காணிக்கும் வகையில் சாலை பாதுகாப்பு குறித்த புதிய விதிகளை 6 மாதத்திற்குள் உருவாக்குமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், தேசிய நெடுஞ்சாலைகளை போல விதிகளை அமல்படுத்த மாநில அரசுகள் விரும்பினால் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் கலந்து ஆலோசித்து விதிகளை உருவாக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.