சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகளை 4 வார காலத்திற்குள் அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற அக்டோபர் வரை கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஏனெனில் மொத்தம் 230 குடும்பங்களில் 138 குடும்பங்கள் தற்போது அங்கு தங்கி இருப்பதாகவும் அவர்களை அப்புறப்படுத்துவதில் சில சட்டம்-ஒழுங்கு பிரச்னை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
ஆனால் அதற்கு நீதிபதிகள், சட்டம்-ஒழுங்கு பிரச்னை என்பது மாநில அரசின் விவகாரம். ஏற்கனவே இந்த விவகாரத்தில் 10 ஆண்டுகள் காலதாமதம் ஏற்பட்டுள்ளது, எனவே இதற்கு மேல் காலதாமதம் ஏற்படுவதை ஏற்க முடியாது.
எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் யாரேனும் பிரச்னை செய்தால் பாதுகாப்புக்காக துணை ராணுவத்தை கூட நீங்கள்அழைத்துக் கொள்ளுங்கள். ஆனால் உத்தரவு அமல்படுத்தப்பட வேண்டும்.
இன்னும் 4 வார காலத்திற்குள் ஆக்கிரமிப்பை முழுமையாக தமிழக அரசு அகற்ற வேண்டும். 4 வாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும் என்ற தங்களது இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை என்றால் தமிழக தலைமை செயலாளர், காவல்துறை மூத்த அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டியது இருக்கும் என்று அந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது.








