கன்னிகாபுரத்து கவிதைகாரன்..!!!
“இயற்கையோடு இணைந்தால்
உலகம் முழுவதும் அழகு…!!
கவலை யாவும் மறந்தால் இந்த
வாழ்க்கை முழுவதும் அழகு…!!”
என்ற வரிகள் மூலம் சத்தமில்லாமல் இரண்டு தேசிய விருதுகளை தட்டிச் சென்ற கன்னிகாபுரத்தின் கவிதைகாரன்..!! கருவில் இருக்கும் போதே தனக்கு கதை சொன்ன தாயை தன் மூன்று வயதில் இழந்தவர். பின்னாளில் இவர் மீட்டிய ஆனந்த யாழுக்கு நரம்பெடுத்துத் தந்தது அவரின் தந்தையின் கைகள்.
“வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒரு முறை
விஷேசமாக நடக்கும்.
ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்…
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்…
எடுப்போம் நிறையவே!”
என்று கணையாழி பத்திரிகையின் மூலம் ஆரம்பித்தது இந்த கவிஞனின் படைப்பு..
‘ புத்தக உலகுக்குள் நுழைந்த இவர், தனது தாயின் வாசனை மறந்து, புத்தக வாசனையை துணையாக்கி கொண்டார் ‘. அதனால் தான் “ஆராரோ பாட இங்கு தாயுமில்லை ” என்ற இவரது வரிகள் தேசிய விருதினை தழுவி சென்றது போல…சிறுவயதிலேயே அருவி, ஆரஞ்சு மேகம் என்ற கவிதைகளுக்கு சொந்தக்காரராகிய இவர் சீமானின் வீரநடை படத்தில் “முத்து முத்தாய் பூத்திருக்கும்” என்ற பாடலின் மூலம் திரைப்பட வாழ்கையை தொடங்கி, பிறகு இளம் பருவ சிட்டுகளை தன் பாடல்களால் கட்டி போட்டவர்.
குழந்தைப் பருவத்தில் ஒரு பாடலின் இசையை மட்டுமே ரசனையின் வடிவமாக கேட்டிருப்போம். ஆனால், இளமையில் ஒரு பாடலின் வரிகளை நமக்கான தேடலாக மாற்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் இந்த ஒப்பற்ற கவிஞனின் ஒப்பான வரிகள். காதல், அன்பு, அரவணைப்பு, ஏக்கம், வெற்றி, தோல்வி என நம் மனநிலைக்கு ஏற்றார்போல ஒருவன் எழுதுகிறான் என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன இவரின் முத்தான வரிகள். நம் உணர்வுகளை பிம்பம் போல் பிரதிபலிக்கும் வரிகளின் வாமணன்.
“காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை…!!”
என்ற “முதல் காதலனின்” முதல்வன். கவிஞனாக இல்லாமல் ஒருவன் பாடலாசிரியராக ஆகிவிட முடியும்.. ஆனால், ஒரு கவிஞன் பாடலாசிரியராகி ஒரு தலைமுறையையே தன் வரிகளால் ஆக்கிரமிப்பு செய்தவர் நா.முத்துகுமார். வலிகளை தெரிவிக்க ஒவ்வொரு கவிஞனும் ஒவ்வொரு சொல்லையும், பதத்தையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்த ஒப்பற்ற கவிஞன் மட்டுமே நம் வலிகளை தன் கண்ணாடி வழியாக உணர்ந்து எதார்த்தமான வரிகளை படைத்த வல்லவன்.
தன் மகனுக்கு எழுதிய இறுதி கடிதத்தில் ” உன் மொழியில் உனக்கு எழுத, நான் கடவுளின் மொழியை அல்லவா கற்க வேண்டும்.” என்ற வரிகள் நம் ஆழ்மனதில் ஆட்கொண்டு கண்துளியாய் வெளிப்பட்டது. 
” பேரன்பின் ஆதி ஊற்று…
அதை தொட்டு திறக்கும் காற்று…”
என்ற தரமணியின் வரிகளோடு தன் வாழ்வின் எழுத்துகளை இறுதியாக்கி கொண்டான் இந்த ஒப்பற்ற கவிஞன். தன் பாடல்வரிகள் மூலம் நம் வாழ்க்கையோடு ஒரு அங்கமாகவே இயைந்து கொண்ட இந்த கன்னிகாபுரத்தின் கவிதைக்காரனுக்கு இன்று அகவை தினம்….!!!!!
– பவானி பால்பாண்டி







