உலகம் ழுழுவதும் கடந்த 2020 முதல் 2022 ஆண்டு வரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எராளமான மக்கள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் உயிரிழப்பை கட்டுபடுத்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. ஆனால் தடுப்பூசியால் உடல் நில பாதிப்புகள் உண்டாவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கிடையில் இந்தியாவில் கோரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு தங்களது குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறி, பெற்றோர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், மரணங்கள் குறித்து ஒரு சுதந்திரமான நிபுணர் குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும், உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிக்குப் பின்னர் தீவிர பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ‘குறைந்தபட்ச இழப்பீட்டுக் கொள்கையை’ மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதே நேரம் இந்த விவகாரத்தை ஆராய ஏற்கனவே உள்ள அறிவியல் ரீதியான கண்காணிப்பு அமைப்புகளே போதுமானது என்றும், தனியாக ஒரு நிபுணர் குழு அமைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.







