ஆளுநர் மேற்கொள்ளக்கூடிய அரசு அமைப்பிற்கு ஆதரவு; ஐயுஎம்எல் கட்சி அறிவிப்பு…!

திமுக கூட்டணி கட்சியான ஐ.யு.எம்.எல் கட்சி ஆளுநர் மேற்கொள்ளக்கூடிய அரசு அமைப்புக்கான அனைத்து செயல்பாடுகளுக்கு துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளது.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொடர்ந்து பெரும்பான்மைக்கான எண்ணிக்கையை திரட்டும் பணியில் தவெக ஈடுபட்டது. இது தொடர்பாக தவெக தரப்பில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் (5), சிபிஐ (2), சிபிஎம் (2) ஆகிய கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால் தவெக ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் மற்றொரு திமுக கூட்டணி கட்சியான ஐ.யு.எம்.எல் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாது;

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்று பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் முறையே ஏ.எம். ஷாஜஹான், எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் பாஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஜனநாயக முறையிலான ஆட்சி நிறுவப்படுவதற்கு திமுக தலைவர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு மனதோடு வரவேற்கிறது.


சட்டமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினுடைய இரண்டு உறுப்பினர்களும் மேதகு ஆளுநர் மேற்கொள்ளக்கூடிய அரசு அமைப்புக்கான அனைத்து செயல்பாடுகளுக்கும் துணை நிற்பர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.