இந்தியா- இங்கிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கு கிறது. இந்த தொடரில் வெல்ல, யாருக்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்று கவாஸ்கர் கணித்துள்ளார்.
விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட், நாட்டிங்காமில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான முதல் தொடர் இது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் காயமடைந்து இந்தியா திரும்பிவிட்டார். இந்நிலையில் காயம் காரணமாக, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வாலும் விலகியுள்ளார். நேற்று நடந்த பயிற்சி போட்டியின்போது அவர் காயமடைந்ததால் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதில் பிருத்வி ஷா அல்லது கே.எல் ராகுல் ஆகியோரில் ஒருவர், ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் புஜாரா, இந்தப் போட்டியில் நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம். துணை கேப்டன் ரஹானே, கேப்டன் கோலி ஆகியோர் நிதானமான ஆட்டத்தைக் கடைபிடித்தால், இந்திய அணி வெல்ல வாய்ப்பிருக்கிறது.
இந்திய அணி, இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வெல்ல தீவிரமாக உள்ளது. அதே நேரம் இங்கிலாந்து அணி, இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க தயாராகவே இருக்கிறது. இந்நிலையில் வானிலை வெப்பமாக இருந்தால், இந்திய அணி வெல்ல அதிகம் வாய்ப்பிருப்பதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார்.
அவர் கூறும்போது, இந்த தொடரில் வானிலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. லேசான மழை பெய்தாலும் வெயில் அதிகமாக அடிக்கிறது. வெப்பமான சூழல் அமைந்தால், இந்திய அணி, 4-0 என்ற கணக்கில் வெல்ல வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.









