நடிகர் வடிவேலு பாணியில் அரிசி கடைகளில் நூதன மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சிங்கம்புணரி, எஸ்.புதூர் , புழுதிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள மளிகை கடைகளுக்கு வந்த இளைஞர் ஒருவர், நடிகர் வடிவேலு பாணியில் அந்தந்த பகுதிகளில் உள்ள முக்கிய பிரமுகரின் பெயரைக் கூறி 25 கிலோ அரிசி, 5 லிட்டர் எண்ணெய் வாங்கி வர சொன்னதாக கூறியுள்ளார். அதை நம்பிய மளிகைக் கடைக்காரர்களும் பணம் வாங்காமல் பொருட்களைக் கொடுத்துள்ளனர்.
சிலரிடம் பணத்தை வீட்டில் மறந்து வைத்து விட்டதாகக் கூறியும் 20 க்கும் மேற்பட்ட மளிகை கடைகளில் அந்த இளைஞர் மோசடி செய்துள்ளார். அனைத்து கடைகளிலும் 25 கிலோ அரிசி, 5 லிட்டர் எண்ணெய் மட்டுமே வாங்கியுள்ளார்.
பின்னர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மளிகைக்கடைக்காரர்கள் இதுகுறித்து போலீசில் புகாரளித்துள்ளனர். இதையடுத்து அந்த இளைஞரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் மேலவளவைச் சேர்ந்த செல்வபாண்டி என்பதும் தற்போது மேலூரில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 10 அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர். சமையல் வேலை செய்து வந்த இவர், கொரோனா தொற்று காரணமாக வேலையில்லாததால் இந்த மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.







