photo courtesy: The Hindu
7 மாதங்களுக்குப் பிறகு நாளை தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
நாடு முழுவதும் முதல் அலை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இரண்டு மாதங்கள் கடுமையான ஊரடங்குக்குப் பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததால் ஊரடங்கில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மார்ச் மாத தொடக்கத்தில் பரவத் தொடங்கிய கொரோனா இரண்டாம் அலை, தற்போது தனது கோர தாண்டவத்தை நாடு முழுவதும் நிகழ்த்தி வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு தொடர்ந்து உச்சத்தை வருகிறது. நேற்று மட்டும் 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு கடந்த மூன்று நாட்களாக அமல்படுத்தப்பட்டு வந்தது. அதேபோல நாளை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு நாளை தமிழ்நாட்டில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால் அன்றைய தினம் இறைச்சி, மளிகை கடைகளில் அதிகக் கூட்டம் கூடும். முழு ஊரடங்கு காரணமாக நாளை அனைத்து கடைகளும் அடைக்கப்படவுள்ளது. இதனால் மளிகை, இறைச்சி கடைகளில் அதிக அளவில் மக்கள் கூடினர். சென்னையிலுள்ள மீன் சந்தைகளிலும் அதிக அளவிலான கூட்டம் கூடியது. மேலும், மாலையில் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் காய்கறி கடைகள் வழக்கம்போலவே இயங்குகின்றன.




