கனிமவளங்களை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழ் நாடு அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. அண்டை மாநிலங்களுக்கு கட்டுமான பொருட்களை பெருமளவு கொண்டு செல்வதால் பற்றாக்குறை மற்றும் செயற்கையான விலையேற்றம் உருவாவகி மாநிலத்தில் உள்ள கட்டுமான திட்டப்பணிகள் பாதிக்கப்படுவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த தடையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம், விளவங்கோட்டைச் சேர்ந்த லிபின் பொன்னுசுவாமி லீலா என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், தமிழக அரசு பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. நாங்கள் லாரிகள் மூலம் உரிய அனுமதியுடன் கேரளாவுக்கு கனிமங்களை கொண்டு சென்று தொழில் செய்து வருகின்றோம். இந்த தொழிலின் மூலம் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. தற்போதைய தடை காரணமாக பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கனிம வள இயக்குநர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், ஆர். சக்திவேல் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.




