முழு ஊரடங்கையொட்டி தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவசியமின்றி கர்நாடகாவிலிருந்து வந்த வாகனங்கள் மாநில எல்லையான ஓசூரில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. முழு ஊரடங்கையொட்டி தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் புதுச்சேரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த வாகனங்களை மாநில எல்லையில் காவல்துறையினர் தடுத்தி நிறுத்தினர். அப்போது மருத்துவம், திருமணம் போன்ற தேவைகளுக்காக வந்த வாகனங்களை மட்டும் தமிழ்நாட்டின் எல்லைக்குள் அனுமதித்தனர். தமிழ்நாட்டில் பொது போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டதால் புதுச்சேரி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
முழு ஊரடங்கு காரணமாக நெல்லை மாவட்டம் பணகுடியில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசியத் தேவைகளின்றி சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். ஈரோட்டில் முழு ஊரடங்கையொட்டி அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் சாலைகள் களையிழந்து காணப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ,ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன.
இதனிடையே முழு ஊரடங்கைப் பயன்படுத்தி தூய்மைப் பணியாளர்கள் கரூர் பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தினர். தூய்மைப் பணியாளர்களின் இந்த செயலுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்தனர்.








