பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை. நலத்திட்டங்களில் பிரதமர் மோடி புகைப்படம் இடம்பெற வேண்டுமா? என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து திமுகவின் ராஜீவ்காந்தி உடன் நேர்காணல் நடத்தப்பட்டது. அதனை விரிவாக காணலாம்.
பிரதமர் மோடி பங்கேற்ற அரசு விழாவில், நீட், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை பற்றி பேசியது மத்திய அரசுடன் இணக்கமான சூழலில் இருக்க விருப்பமில்லை என்ற உணர்வை வெளிப்படுத்துவதாக பாஜக தலைவர்கள் விமர்சிக்கிறார்களே?
ராஜீவ்காந்தி : உறவுக்கு கைகொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதை தெளிவாக்கிவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்தியாவின் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருகிறார். அவரிடம் தனிப்பட்ட விஷயங்களை பேச முடியாது. ஒரு மாநிலத்தின் நீண்ட நெடிய காலமாக இருக்கும் பிரச்னைகள், தீர்க்கப்படாத விஷயங்களைத் தான் கேட்க முடியும். 31,000 கோடிக்கு திட்டங்களைத் தொடங்குகிறீர்கள் என்று சொல்லித் தான் முதலமைச்சர் ஸ்டாலின் உரையை ஆரமித்தார். அரசு ரீதியாக மக்களின் தேவைகளைக் கோரிக்கையாக வைப்பது தானே சரி. அது எப்படி அரசு ரீதியாக ஒத்துவராத விஷயம் என்று சொல்ல முடியும்?
மாநில – மத்திய அரசுகள் இணைந்து கட்டமைப்பை மேம்படுத்த நடக்கும் விழாவில் முதலமைச்சர் அரசியல் பேசிவிட்டதாக பாஜக விமர்சிக்கிறதே?
ராஜீவ்காந்தி : தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் பிரதமர் மோடிக்கும் எந்த உறவும் இல்லை. கொள்கை ரீதியாக எந்த உறவும் அவருக்கும் எங்களுக்கும் இல்லை. 8 ஆண்டு கால பாஜக ஆட்சி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக எல்லாவற்றையும் செய்கிற போது, குறிப்பாக, மதச்சார்பின்மைக்கு எதிராக, சகிப்புத் தன்மைக்கு எதிராக செயல்படும் போது அதனுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற நிலைப்பாட்டைத் தான் திமுக எடுக்கிறது. பிரதமர் மோடி பாஜக தலைவராக மோடி இங்கு வரவில்லை. மாறாக, பிரதமராக வருகிறார். ஒரு மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கையைத் தானே அவரிடம் கேட்க முடியும். அப்போ, இந்த மேடையை விட்டு எந்த மேடையில் அவரிடம் தமிழக மக்களின் கோரிக்கைகளை கேட்க முடியும்? முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடியை சந்தித்த போது இதே கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்தார். அந்த கோரிக்கைகளுக்கு இதுவரைக்கும் பிரதமர் மோடி செவிசாய்க்கவில்லை. அதனால், மக்கள் மன்றத்தில் பேசுவது தானே நியாயம். அதை தனிப்பட்ட விவகாரமாக பாஜக எடுக்க வேண்டிய தேவையே இல்லை. இதை நாங்கள் செய்திருக்கிறோம். இதை செய்யவில்லை என்று விவாதமாக கொண்டு வாருங்கள். அது தான் ஆரோக்கியமான அரசியல். நாங்கள் முன்வைத்த இந்த பிரதானமான ஐந்து கோரிக்கைகள் என்றைக்காவது பேசப்பட்டிருக்கிறதா? தீர்க்கப்பட்டிருக்கிறதா? பாஜக ஆளும் மாநிலங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையும் சேர்த்து தான் முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார். அது குறித்து ஏன் பேச மறுக்கிறீர்கள்? பிரதமர் மோடியை பற்றியோ, பாஜக என்கிற கட்சியைப் பற்றியோ நாங்கள் பொது மேடையில் பேசவில்லையே. திட்டங்கள் தொடங்கும் போது பல வாக்குறுதிகளை ஒன்றிய அரசு கொடுக்கிறது. ஆனால், அதற்கான நிதியை ஒதுக்குங்கள் என்றால் ஒன்றிய அரசு அதற்கு எந்த பதிலையும் தருவது இல்லை.
தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு முறையாக கொடுத்துவிட்டது என்கிறார்களே? திமுக பொய்யை பரப்புவதாக விமர்சிக்கிறதே பாஜக?
ராஜீவ்காந்தி : பொய்யை பரப்புவது பாஜகவின் அண்ணாமலை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வேலை. அது எங்கள் வேலை கிடையாது. அதிமுக அரசு நிதியமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் இருந்த போது ஜிஎஸ்டி கவுன்சிலில் கையெழுத்து போடும் போது ஒன்றிய அரசு என்ன கூறியது? எல்லா இழப்பீடுகளையும் தருவோம். மாநில அரசு கேட்கும் போது இழப்பீட்டையும் பற்றாக்குறையையும் கொடுப்போம் என்றார்கள். எந்த பற்றாக்குறையைக் கொடுத்துள்ளீர்கள். 14,000 கோடியை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை என்பதை தமிழ்நாடு அரசு பட்ஜெட்டிலேயே அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கான சிக்கலே போதிய நிதி கிடைக்கவில்லை என்பது தானே. அரசு ஆவணங்கள் இருக்கிறது இதில் பொய் சொல்ல என்ன இருக்கிறது.
தமிழ்மொழியின் பற்றை பிரதமர் மோடி அளவிற்கு எந்த தலைவர்களும் வெளிப்படுத்தியதில்லை. மொழிக்கொள்கை மூலம் மக்களிடையே திமுக அரசியல் செய்வதாக விமர்சிக்கிறார்களே?
ராஜீவ்காந்தி : இதுவரை இந்திய பிரதமர்களாக இருந்தவர்களில் வி.பி. சிங்கைத் தாண்டி மொழி குறித்தான புரிதல் யாருக்கும் இல்லை. ஜவஹர்லால் நேருவிடம் மொழியை யாரிடமும் திணித்துவிடக் கூடாது என்ற ஜனநாயகத் தன்மை இருந்தது. ஆனால், வி.பி. சிங்கிடம் தான், தமிழ் மொழிப் பற்று இருந்தது. காங்கிரஸ் கட்சியை குறை கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி எந்த மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். 70 ஆண்டுகளாக இந்தியை வளர்ப்பதாக கூறுகிறீர்கள். இந்தி என்ன வளர்ந்துவிட்டது? இந்தி பேசும் மக்களின் வாழ்வாதாரம் முன்னேறி உள்ளதா? அவர்களின் தனி மனித குறியீடு முன்னேறி உள்ளதா? வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதா? மந்திர மொழியாக இருக்கும் சமஸ்கிருதத்திற்கு 630 கோடி ஒதுக்குகிறீர்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா ஆகிய 6 செம்மொழிகளுக்கு 38 கோடி ரூபாய் ஒதுக்குகிறீர்கள். இது தான் செம்மொழி பற்றா? பாரதியார் பாடலை பாடலாம். ஆனால், தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி என்ன செய்திருக்கிறார்? ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக, அதிகார மொழியாக தமிழ் மொழியை மாற்றுங்கள் பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகை நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?
ராஜீவ்காந்தி : உறுதியாக எதிரொலிக்கும் என்று தான் பார்க்கிறேன். இது திராவிட மாடலுக்கோ, பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய பார்வைக்கு எதிரான கருத்து இல்லை. அதற்கு மாறாக தலைமை சரியில்லாத, மென்மையான இந்துத்துவா கருத்துக்களைப் பேசுகிற அதிமுக என்கிற கட்சி கரைந்து போய்விட்டது. அந்த கட்சியின் தொண்டர்களை வைத்துக்கொண்டு பாஜக தமிழ்நாட்டினுள் நுழைய பார்க்கிறது. இது பெரியார் மண், திராவிட மண். இங்கு ஜனநாயகத்திற்கு எதிராக யாரும் வந்துவிட முடியாது. அவர்களை உறுதியாக வீழ்த்துவோம். தேர்தல் மட்டத்தில் பாஜக கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள். ஒன்றிய அரசை வைத்துக்கொண்டு விளம்பரம் காட்டுகிறார்கள். அது கண்டிப்பாக எதிரொலிக்கும். அதனை உறுதியாக திமுக எதிர்த்து களமாடும்.
மாநில அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி படங்களை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே?
ராஜீவ்காந்தி : இன்றைக்கு ஒன்றிய அரசுடனான நிதி விவகாரம் தான் மிகப்பெரிய சிக்கலுக்கு உள்ளாகுகிறது. ஏன் சிக்கலுக்கு உள்ளாகுகிறது என்றால், மக்களிடம் நேரடியாக நிதியைக் கொடுக்கும் பொறுப்பை ஒன்றிய அரசு செய்யவில்லை. பேரறிஞர் அண்ணா சொல்வதைப் போல, மண்ணைக் காக்கிற பொறுப்பு மட்டும் தான் ஒன்றிய அரசுக்கும் மக்களைக் காக்கும் பொறுப்பு மாநில அரசுக்கும் தான் கொடுக்கப்பட்டது. மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது மாநில அரசு கையில் இருக்கிறது.
இது தான், அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கம். ஆனால், மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்பு, மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்குவது பிளானிங் கமிஷன் அதைக் கலைத்துவிட்டு, அரசியலமைப்பு சட்டத்தின் ஆதாரம் இல்லாமல் ஜி.எஸ்.டி கவுன்சில் போன்ற ஒன்றைக் கொண்டு வந்து, நிதி பங்கீடு குறித்து வெளிப்படை தன்மை இல்லை.
அரசியல் அமைப்பு சட்டம் சொல்லாத ஒரே நாடு ஒரே வரி என்று எல்லா வரியையும் தாங்களே வாங்கிக் கொண்டு, மாநிலங்களுக்கு வரியைப் பிரித்துக்கொடுக்கவில்லை. அதற்கு மாறாக திட்டங்களை நேரடியாக அறிவிக்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் மாநில உரிமையை மீறுகிறார்கள். மாநில அரசின் உரிமையைப் பறிக்கிறார்கள். மக்கள் நேரடியாக பாதிக்கப்படும் போது, ஒன்றிய அரசிடம் கெஞ்சி அவர்களிடம் காத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது. மோடி படத்தை வைப்பது இல்லை. நாங்கள் தான் பணம் கொடுத்தோம் என்கிறார்கள். ஒன்றிய அரசின் எந்த திட்டங்களுமே மாநில எல்லைக்குள் நேரடியாக செயல்படுத்த முடியாது.
உதாரணமாக, பிரதமரின் வீடு கட்டும் திட்டம், 60,000 ரூபாய் மட்டும் தான் ஒன்றிய அரசு கொடுக்கிறது. மீதம் இருக்கும் இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை மாநில அரசு தான் கொடுக்கிறது. இதில் எப்படி பிரதமர் மோடி படத்தை போட முடியும்? தேசிய நெடுஞ்சாலைகளில் 60 விழுக்காடு பணத்தை ஒன்றிய அரசு போடுகிறது . மீதமுள்ள 40 விழுக்காடு பணத்தை மாநில அரசு தான் போடுகிறது. இதில் எப்படி பிரதமர் மோடி படத்தை போட முடியும்? இந்த புரிதல் இல்லாமல் நேரடியாக
மக்களிடம் சேவை செய்கிறோம் என்ற வகையில், கடந்த ஆட்சியாளர்களான இந்திராகாந்தி, வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்றோர் செய்யாததை கூட அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பிரதமர் மோடி தனது புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என்பதற்காக செய்கிறார். இதனால், தான் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்குமான சிக்கல் மேலும் மேலும் அதிகமாகுகிறது.







