கோடை எதிரொலி: தென்காசியில் எலுமிச்சை கிலோ ரூ.180க்கு விற்பனை!

தென்காசி மாவட்டத்தில் கடுமையான வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை பழங்களில் விலை தொடர்ந்து அதிகரித்து உள்ளது.  ஒரு கிலோ ரூ. 180 க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது. …

தென்காசி மாவட்டத்தில் கடுமையான வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை பழங்களில் விலை தொடர்ந்து அதிகரித்து உள்ளது.  ஒரு கிலோ ரூ. 180 க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது.  வெயிலினை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அதிகளவில் பழங்கள் மற்றும் அதனைச் சார்ந்த குளிர்பானங்களை பருகி வருகின்றனர்.  சர்பத் மற்றும் ஜூஸ் வகைகளை தயார் செய்வதற்கு அதிகம் எலுமிச்சை பழங்களை பயன்படுத்தி வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் அதிகம் விளையும் எலுமிச்சை பழங்களின் விலையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தைக்கு கடையம்,  ஆவுடையானூர் வள்ளியம்மாள்புரம்,  சேர்வைகாரன்பட்டி, புலவனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் எலுமிச்சை சாகுபடி செய்து வரும் நிலையில் எலுமிச்சை பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். சந்தையில் கடந்த வாரம் வரையில் ஒரு கிலோ எலுமிச்சைபழம் ரூபாய் 100 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ. 180க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கடுமையான வெயிலின் காரணமாக எலுமிச்சை பழக்கங்களின் தேவை அதிகரித்துள்ளதாகவும்,  அதனை வாங்குவதற்கு உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கேரளா வியாபாரிகள் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  பாவூர்சத்திரம் காய்கறி சந்தையில் எலுமிச்சை பழங்களை ஏலத்தில் எடுப்பதற்கு பலரும் போட்டி போட்டனர். உள்ளூர் வியாபாரிகளை காட்டிலும்,  வெளியூர் வியாபாரிகள் எலுமிச்சம் பழங்களை ஏலத்தில் எடுப்பதற்காக குவிந்திருந்தனர்.

வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடிக்குமானால் எலுமிச்சை பழங்களின் விலையும்
கணிசமாக உயர்ந்து கொண்டே செல்ல வாய்ப்புள்ளது எனவும் வியாபாரிகள் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.