நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசை தனக்கு அறிமுகம் செய்து வைத்ததற்காக, உதவியாளருக்கு சுகேஷ் சந்திரசேகர் பணத்தை அள்ளி இறைத்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், ஏராளமான மோசடி வழக்குகளில் தொடர்புடையவர். டெல்லி ரோகிணி சிறையில் இருந்தவாறே, பல தொழிலதிபர்களை போன் மூலம் ஏமாற்றியும், மிரட்டியும் ரூ.200 கோடி பணம் பறித்ததாக இவர் மீது புகார்கள் உள்ளன. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இதில், பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி ஆகியோருக்கு சுகேஷ் சந்திரசேகர், விலை உயர்ந்த பரிசுகளை தந்தது தெரியவந்தது. ஜாமீனில் வெளியே வந்த சுகேஷ், நடிகை ஜாக்குலினுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த வழக்கில் ஜாக்குலினிடமும் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில் பல பகீர் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு பிங்கி இரானி என்பவர்தான் நடிகை ஜாக்குலினை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இதற்காக சுகேஷ் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுத்ததுள்ளார். இதுவும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. மேலும் சுகேஷின் மனைவியும், நடிகையுமான லீனா மரியா பால்தான், சுகேசின் குற்றங்களுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார் என்றும் சுகேஷ் கைது செய்யப்பட்டதும் அவர் ஆதாரங்களை அழித்துவிட்டார் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.









