தேர்தல் சமயத்தில் இலவசங்களை அறிவிப்பதற்குத் தடை விதிக்கக்கோரித் தொடரப்பட்ட வழக்கை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தேர்தல் சமயத்தில் இலவசங்களை அறிவிப்பதற்குத் தடை விதிக்கக்கோரி அஸ்வினி உபாத்தியாய் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் பதிலை செய்தித்தாளில் படித்தோமே தவிர நேற்று இரவு வரை தங்களுக்குக் கிடைக்கவில்லை தலைமை நீதிபதி தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம், நாங்கள் இணையம் மூலம் தாக்கல் செய்தோம் எனக் கூறியது.
அப்போது கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, நீதிமன்றத்துக்கு முன்னர் செய்தித் தாளுக்குக் கிடைத்தது எப்படி? இதற்கு மேல் அதில் படிக்க என்ன இருக்கிறது எனத் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், இந்த விவகாரத்தில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும் எனக் கூறினார். அதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி, நாங்கள் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டுமா? எனக் கூறினார். அதற்கு மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், மத்திய அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும் எனக் கூறினார். மேலும், தேர்தல் வாக்குறுதி அறிக்கைகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பார்களா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு விளக்கமளித்த தேர்தல் ஆணையம், அவ்வாறு தாக்கல் செய்ய வேண்டும் எனக் கட்டாயம் இல்லை எனக் கூறியது.
அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு, பெரும்பாலான தேர்தல் இலவச வாக்குறுதிகள் அறிக்கையில் இடம்பெறுவதில்லை எனக் கூறியது. அப்போது, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த அளவுக்குத் தலையிட முடியும்? எனத் தலைமை நீதிபதி தெரிவித்தார். அதற்கு மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், இந்த விவகாரத்தைக் கட்டுப்படுத்த சட்டம் இயற்றப்படுவதே தீர்வு எனக் கூறினார்.
இந்த இலவச விவகாரத்தில், ஒருசாரர் வேண்டும் என்பர், மற்றொரு சாரர் இலவசம் வேண்டாம் என்பர். அதனால், இந்த விவகாரம் ஒரு முக்கிய பிரச்சனை என்பதால் இரு தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும். இலவசங்களும், சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை அதில் ஒரு தெளிவான நிலை இருக்க வேண்டும். ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் முன்னர் ஒரு மாநிலத்தின் பொருளாதார நிலை என்ன என்பது தெரியாது. மேலும், ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகத் தவறுகளை இழைக்கக்கூடாது எனத் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
அப்போது வாதிட்ட மத்திய அரசு இந்த விவகாரத்தை வரைமுறை படுத்த வேண்டும், ஏனெனில் இதுபோன்ற இலவசங்கள் என்ற தேர்தல் அறிவிப்பால் பல அரசு நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன குறிப்பாக மின்சாரத்துறை. எனவே, இந்த இலவச அறிவிப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் எனக் கூறியது.
அப்போது பேசிய தலைமை நீதிபதி, பொருளாதார இழப்பு மற்றும் மக்கள் நலன், இரண்டுக்கும் ஒரு சமநிலையில் இருக்க வேண்டும். அதனால்தான் இந்த விவகாரத்தில் உங்கள் ஒவ்வொருவரின் அவர்களின் கருத்து, பார்வை மற்றும் எண்ணங்களை முன்மொழியக் கூறுகிறோம் எனக் கூறி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.








