உத்தரபிரதேசத்தில் காவலர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக காவலர் ஒருவர் அழுது கொண்டே புகார் அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உத்திரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. உத்திரபிரதேசத்தில் ரவுடிகள் மற்றும் குண்டர்களின் அராஜகத்தை முந்தைய ஆட்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போலீசாரின் துணையுடன் அடக்கி ஒடுக்கினார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் காவல்துறையின் மீது கவனம் செலுத்தப்படும் என தெரிவித்திருந்ததோடு, காவல்துறையை முதலமைச்சர் யோகி தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறார். காவலர்கள் நன்கு பணிபுரிய அவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்திருந்தார். இதற்காக தனித்தனியாக ரூ.1,875 வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக போலீஸ் காவலர் ஒருவர் அழுது கொண்டே போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. ஃபெரோசாபாத்தில் ரொட்டி, பருப்பு மற்றும் அரிசி உள்ள தட்டுடன் சாலையில் நின்று போராட்டம் நடத்திய காவலர் மனோஜ் குமார், விலங்குகள் கூட சாப்பிடாத அளவு தரமற்ற உணவுகள் தங்களுக்கு வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக, காவல்துறை துணை ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








