“அமைச்சர் மனோ தங்கராஜ் மீது ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு” – அண்ணாமலை X தளத்தில் பதிவு

“அமைச்சர் மனோ தங்கராஜ் மீது ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு  தொடர இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆவின் பால் நிறுவனம்,  பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை…

“அமைச்சர் மனோ தங்கராஜ் மீது ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு  தொடர இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆவின் பால் நிறுவனம்,  பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு டிலைட் என்ற பெயரில் ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்து சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.  இதற்கு  எதிர்க்கட்சிகளிடையே கடும்  எதிர்ப்புகள்  கிளம்பி வருகின்றன.

இது குறித்து கடந்த சில நாட்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,  தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்தின் பாலில் கொழுப்பு அளவு குறைக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.  மேலும், இதுகுறித்த அறிக்கை ஒன்றையும்  தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் “ஆவின் நிறுவனம் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதன் காரணமாகத் தான் குறைந்தபட்ச ஆதார விலை பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கிறது.  வடமாநில பால் நிறுவனங்களை தமிழ்நாட்டில் நுழைக்க வேண்டும் என்பதற்காக கார்ப்பரேட் கைக்கூலிகள்  நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கிறார்கள்.” என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

“என் மீது கூறிய அவதூறுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால்,  வழக்கம் போல,  நான் அவர் பேரன்,  இவர் தம்பி என  அமைச்சர் மனோ தங்கராஜ்  கூறிக் கொண்டிருக்கிறார்.  நீதிமன்றத்தில் இந்தக் கதை எல்லாம் செல்லாது என்பதை,  பல நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உள்ள அவரது உடன்பிறப்பிடமோ,  அண்ணனிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம்.

ஏற்கனவே,  பிரதமர் மோடியை  மிகவும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்து விட்டு,  பின்னர் பொதுமக்கள் எதிர்ப்புக்குப் பயந்து பதிவை நீக்கியது போல,  அவதூறு வழக்குக்குப் பயந்து கீழ்க்கண்ட இந்த பதிவை நீக்கிய கோழை நீங்கள்,  வீரம் பேசுவது நகைச்சுவை.

ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன்.  அந்த 1 கோடி ரூபாய் பணம்,  ஆவின் நிறுவனத்திற்குப் பால் கொடுக்கும் நமது தமிழக விவசாயிகளின் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும்.” என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.