ஆவின் நிறுவனத்தின் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் சென்னையில் அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பால் மற்றும் பால் உப பொருட்கள் பால் பண்ணைகளை இயக்கி வருகிறது. இந்நிலையில், இன்று (10.07.2022) தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆய்வின்போது, சூரிய மின் உற்பத்தியை பயன்படுத்துவதை அதிகப்படுத்தி மின்சார செலவினங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பால் பண்ணை இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்தி, உற்பத்தி செலவினங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாலகங்களில் குழந்தைகள் விரும்பும் பால் பொருட்களை பாலகத்தின் முன் பகுதியில் காட்சிப்படுத்தி விற்பனையை அதிகப்படுத்த வேண்டும்.
ஆவின் பாலகங்களில் உள்ள விலைப்பட்டியல், நுழைவு வாயில் அருகே வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வண்ணம் பெரிதாகவும் பால் பொருட்களின் படங்களுடன் காட்சிப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் பணிக்குழு அமைத்து நிறுவனத்தின் மேம்பாட்டிற்கான மற்றும் விற்பனையை அதிகப்படுத்துவதற்கான சிறந்த ஆலோசனைகள் கூறும் அலுவலர்களுக்கு அதற்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளித்து ஊக்கப்படுத்த வேண்டும்.
ஆவின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டங்களை அவ்வப்போது நடத்தி அவர்களிடையே நிறுவனத்தின் பொருட்கள் பற்றியும் மற்றும் முன்னேற்றத்திற்கான விவரங்களை பற்றியும் கலந்துரையாடப்பட வேண்டும் என்று இறையன்பு அறிவுறுத்தினார்.
பால் பண்ணையின் உற்பத்தி, குளிரூட்டும் பிரிவு, தரக்கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் பொறியியல் பிரிவுகளின் பணிகளை ஆய்வு செய்து பால் பண்ணை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அவர்கள் அறிவுரைகளை வழங்கினார்.
மேலும் பால் ஏற்றி வரப்பட்ட டேங்கர் லாரிகளில் பாலின் தரம் பரிசோதனை செய்யப்படுவது குறித்தும் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாடு ஆணையர் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநர், மருத்துவர். ந. சுப்பையன், ஆவின் தலைமை அலுவலக அதிகாரிகள் மற்றும் பால் பண்ணை அதிகாரிகள் உடனிருந்தனர்.