காளி தேவியின் ஆசீர்வாதம் இந்தியாவுக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் அமைப்பைச் சேர்ந்த சுவாமி ஆத்மஸ்தானந்தாவின் நூற்றாண்டு விழாவில் காணொளி வாயிலாக பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார்.
அப்போது, காளிதேவியின் அருள் குறித்து விரிவாகப் பேசினார். நமது நம்பிக்கை தூய்மையானதாக இருக்கும்போது காளிதேவியே நமக்கு வழிகாட்டுவாள் என தெரிவித்த பிரதமர், காளி தேவியின் எண்ணிலடங்கா ஆசிகள் இந்தியாவுக்கு எப்போதும் இருக்கும் என கூறினார். இந்த ஆன்மீக ஆற்றலைக் கொண்டு நாடு முன்னேறி வருவதாகவும், உலகின் நன்மை இதில் அடங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர் காளியின் தரிசனத்தைப் பெற்ற துறவி என்பதை சுட்டிக்காட்டிய பிரமதர், அவர் தன்னை முழுமையாக காளியின் காலடியில் ஒப்படைத்துக்கொண்டவர் என்றார். தேவியின் அருளால் இந்த முழு உலகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது என ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுவார் என குறிப்பிட்ட நரேந்திர மோடி, இந்த உணர்வு வங்காளத்தின் காளி பூஜையில் தெரியும் என்றார்.
வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் மேற்கு வங்கத்தில் உள்ள பேலூர் மடத்திற்கும், ராமகிருஷ்ண பரமஹம்சர் வழிபட்ட காளி கோயிலுக்கும் தான் சென்றிருப்பதாகவும், அப்போது ஒருவித தொடர்பை உணருவது இயற்கையானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் நம்பிக்கையும் தூய்மையானதாக இருக்கும்போது, காளி தேவி தானாகவே முன்வந்து உங்களுக்கு வழி காட்டுவாள் என்று தெரிவித்த நரேந்திர மோடி, காளியின் ஆசீர்வாதம் இந்தியாவுக்கு எப்போதும் இருக்கிறது என தெரிவித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த லீனா மணிமேகலை காளிதேவி குறித்த சர்ச்சைக்குரிய படம் ஒன்றை ட்விட்டரில் பதவிட்டிருந்ததை அடுத்து, அதற்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்பி மஹூவா மொய்த்ரா ஆதரவு தெரிவித்திருந்தார்.
காளி தேவியை இறைச்சி உண்பவளாகவும், மதுவை ஏற்பவளாகவும் தான் உருவகப்படுத்துவதுண்டு என்றும் அதற்கான சுதந்திரம் தனக்கு இருக்கிறது என்றும் அவர் கூறி இருந்தார்.
இந்ந பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி காளி தேவி குறித்து நேர்மறையாக பேசி இருப்பது கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது.








