விழுப்புரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர், தமிழ்மொழி மற்றும் பாரதியின் மீதும் கொண்டுள்ள பற்று காரணமாக, கைகளில் பாரதியின் உருவம் மற்றும் தமிழ் எழுத்துக்களை பச்சை குத்தியுள்ளார்.
இன்றைய இளைஞர்கள் பலர், சினிமா பிரபலங்களின் மீதும், அரசியல் கட்சியினர் மீதும் தீரா மோகம் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இதன் காரணமாக ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. திரை நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கு மத்தியில் கருத்து மோதல்கள் இணையத்தில் அன்றாடம் எழுந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மையில் முன்னணி தமிழ் நடிகரின் ரசிகர் ஒருவர், திரைப்பட வெளியீட்டின் போது நடந்த கொண்டாட்டத்தின்போது லாரியின் மீதிருந்து விழுந்து உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்கள் ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம், இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதும், இணையதளத்தில் மூழ்கியிருப்பதும் நடைபெற்று வருகிறது.
திரைப் பிரபலங்களின் உருவம், அரசியல் கட்சித் தலைவர்களின் உருவம், காதலன், காதலியின் பெயர், சாதியக் குறியீடுகள், போன்றவற்றை இளைஞர்கள் தங்களது உடலில் பச்சை குத்திக் கொள்ளும் இன்றைய காலக்கட்டத்தில், இளைஞர் ஒருவர் தமிழ்மொழி மீது கொண்டுள்ள பற்று காரணமாக தமிழ் எழுத்துக்களையும், பாரதியின் உருவத்தையும் பச்சை குத்தியுள்ள சம்பவம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
விழுப்புரம், கே.கே.ரோடு பகுதியை சேர்ந்தவர் குணாளன். இவர் கீழ்பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லூரியில், வரலாற்றுத் துறையில் மூன்றாமாண்டு பயின்று வருகிறார். கல்லூரி மாணவரான இவருக்கு சிறுவயது முதல் பாரதியின் மீதும் தமிழ் மொழி மீதும் அதீத காதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாரதியின் உருவம் மற்றும் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற வாசகம், உயிரெழுத்துக்களை கையில் பச்சை குத்தியுள்ளார். அவர் ரூ.16,000 செலவு செய்து தன் கையில், தமிழுக்கு உயிர் ஊட்டும் விதமாக பச்சை குத்தியுள்ளது அனைவரின் மத்தியிலும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், மற்றவர்களிடத்தில் தமிழ் மொழி மீதான பற்றினை ஏற்படுத்தும் விதமாகவும், மாணவர் பச்சை குத்திய சம்பவம், இளைஞர்கள், மற்றும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.
– காமராஜ், செய்தியாளர், விழுப்புரம்