வேறு கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் வாஜ்பாயை புகழ்வேன் எனவும், உயர்ந்த உள்ளம் கொண்டவர் வாஜ்பாய் எனவும் திமுக பொருளாளர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பிற்கான நேர்காணல் நிகழ்வு அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் திமுக பொருளாளர் டி ஆர் பாலு, முதன்மைச்செயலாளர் கே என் நேரு, விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதி மாறன், துணைச்செயலாளர்கள் பொன்.கௌதம சிகாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது இந்த நிகழ்வில் உரையாற்றிய கே என் நேரு, அந்தக்காலத்தில் மாவட்டச்செயலாளர்கள், யார் யாரெல்லாம் சரியாக வருவார்கள் என பார்த்து அணிகளின் பொறுப்புகளை அளிப்பார்கள். இப்போது அணிகளின் நிர்வாகிகள், பொருத்தமானவர்கள் யார் என பார்த்து பொறுப்புகளை அளிக்கிறார்கள். மாவட்டத்தில் கட்சியினரோடு ஒத்துப்போகும், கட்சியை வெற்றி பெறச்செய்பவர்களை நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும்.சில துறைகளால் அமைச்சர்களுக்குப் பெருமை. சில அமைச்சர்களால் துறைக்கு பெருமை. சிறிய இலாகாவாக இருந்த விளையாட்டு மேம்பாட்டுத்துறையை மாபெரும் இலாகாவாக மாற்றியிருக்கிறார் உதயநிதி என்று தெரிவித்தார்.
கே என் நேரு அவர்களைத் தொடர்ந்து பேசிய திமுக பொருளாளர் டி ஆர் பாலு, வேறு கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் வாஜ்பாயை புகழ்வேன். உயர்ந்த உள்ளம் கொண்டவர் வாஜ்பாய். ஒவ்வொரு அணிக்கும் கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் விளையாட்டு மேம்பாட்டு அணியில் மட்டும் எந்த வயதினரும் சேரலாம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 க்கும் 40 வெற்றி பெற வேண்டும். விளையாட்டு அணியை உருவாக்க வேண்டும் என்பது உதயநிதியின் மூளையில் உதித்தது. ஆனால் எங்கு அவருக்கு நேரம் இருக்கிறது என தெரியவில்லை என்று கூறினார்.









