சென்னையில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு காரணமாகப் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையில் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 4 மணி வரை எந்த ரயில் முனையத்திலிருந்தும் புறநகர் ரயில் சேவை இயக்கப்படாது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனையடுத்து வார நாட்களில் வழக்கமாக இயங்கும் ரயில் சேவைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் மார்க்கத்தில் 150 சேவைகள் மட்டுமே திங்கட்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குமிடிபூண்டி, சூலூர்பேட்டையில் 64 ரயில் சேவைகளும் சென்னை கடற்கரை- வேளச்சேரியில் 68 ரயில் சேவைகளும், சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 152 ரயில் சேவைகளும் என மொத்தம் 434 புறநகர் ரயில் சேவைகள் திங்கட்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை இயக்கப்படும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் சேவைகள் குறைக்கப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் மார்க்கத்தில் 32 ரயில் சேவைகளும் சூலூர்பேட்டை மார்க்கத்தில் 24 ரயில் சேவைகளும் சென்னை கடற்கரை- வேளச்சேரியில் 12 ரயில் சேவைகளும், சென்னை கடற்கரை, செங்கல்பட்டு மார்க்கத்தில் 18 ரயில் சேவைகளும் என மொத்தம் 86 ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கால அட்டவணையை நாளை வெளியிடப்படும் என தெற்கு ரெயிவே தெரிவித்துள்ளது.







