‘சுப்ரமணியபுரம்’ ரீ-ரிலீஸ்: கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு … பழைய நினைவுகளில் மூழ்கிய ரசிகர்கள்..!

சசிகுமார் இயக்கத்தில் வெளியான ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் வெளியான நிலையில், இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.  நடிகரும், இயக்குநருமான சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு, ஜூலை…

சசிகுமார் இயக்கத்தில் வெளியான ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் வெளியான நிலையில், இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. 

நடிகரும், இயக்குநருமான சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு, ஜூலை 4 ஆம் தேதி வெளியான படம் ‘சுப்ரமணியபுரம்’. ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இப்படத்தில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சசிகுமார், ஜேம்ஸ் வசந்தன் இருவருக்குமே முதல் படமாக வெளிவந்த இப்படம் விமர்சனரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் நடிகர் சமுத்திரகனி மற்றும் ஜெய்யின் திரைபயணத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் கண்கள் இரண்டால், மதுர குலுங்க, ஆடுங்கடா பாடல்களை இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த காலகட்டத்தில் இந்தப் பாடல்கள் ஒலிக்காத நிகழ்வுகளே இல்லை என்ற வரலாறும் உண்டு. இப்போதும் கூட திருவிழாக்கள் என்றால் இந்த பாடல்கள் நிச்சயம் இடம்பெறும்.

அந்த அளவிற்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில் ஆகஸ்ட் 4-ம் தேதியான இன்று தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இன்று மீண்டும் சுப்ரமணியபுரம்’ படம் தமிழகம், கர்நாடகா, கேரளாவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அந்த வகையில், சென்னை வடபழனி கமலா திரையரங்கில் இன்று காலை திரையிடப்பட்ட ‘சுப்ரமணியபுரம்’ படத்தை பார்ப்பதற்கு சசிகுமார், சமுத்திரக்கனி, நடிகர் ஜெய் ஆகியோர் வந்தனர். அதன்பின்னர் படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

இதேபோல், சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், மதுரை சினிப்பிரியா திரையரங்கம், வெற்றி, மேலூர் கணேஷ் ஆகிய திரையரங்குகளில் இப்படம் ரீ ரீலிஸ் செய்யப்பட்டது. இந்த படத்தினை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் காலை முதல் காட்சிக்கு உற்சாகமாக வருகை தந்தனர்.

மதுரையின் வாழ்வியலோடு நட்புக்கு முக்கியத்துவம் அளிப்பது போலவும், வன்முறை எதற்கும் தீர்வில்லை என்பதை விளக்கும் வகையிலும் வெளிவந்திருந்த இத் திரைப்படத்தினை காண்பதற்காக ஏராளமான இளைஞர்கள் வந்திருந்தந்தனர். 15 ஆண்டுகளுக்கு முன்பாக சிறுவயதில் பார்த்துவிட்டு மீண்டும் திரையில் பார்ப்பது மகிழ்ச்சியாகவும் பிரமிப்பாகவும் உள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.