நியூஸ் 7 தமிழின் நிகரென கொள் 2023 பாலின சமத்துவ உறுதிமொழியை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் சென்னை ராயபுரம் பள்ளி மாணவர்கள் ஏற்றனர்.
சென்னை ராயபுரம் எட்டியப்ப நாயக்கர் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அப்போது நியூஸ் 7 தமிழின் நிகரென கொள் 2023 மற்றும் மாதவிடாய் விடுமுறைக்கான கையெழுத்து இயக்கத்திலும் பங்கேற்றார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாலின சமத்துவ உறுதிமொழியை வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், போதை ஒழிப்பை பேச்சோடு நிறுத்தி விடாமல் அதற்கான முன்னெடுப்பை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். முழுமையான அளவு சட்டத்தை முடுக்கி விட்டு கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
திமுக அரசில் ஜனநாயகரீதியான போராட்டத்தை கூட நடத்த அனுமதி வழங்கப்படுவது இல்லை. என்எல்சி விவகாரத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் ஆதரவாக செயல்பட்டதாகவும் ஜெயக்குமார் பேசினார். விவசாயிகள், மக்கள் எதிர்ப்பை மீறி என்எல்சிக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதாகவும்
இதனை தட்டி கேட்க சென்ற அதிமுக எம்எல்ஏ வை கைது செய்திருப்பது கண்டிக்க கூடிய செயல் எனவும் அவர் பேசினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்ற தலைவராக செயல்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத் திறமை இல்லாமல் குளறுபடியாக இருப்பதாகவும் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். குரூப்-4 தேர்வு எழுதி பல மாதங்கள் ஆகியும் இப்போது வரை தேர்வு முடிவு வெளியாகவில்லை எனக் கூறிய ஜெயக்குமார் திரைப்படத்தில் வருவது போல “வரும் ஆனால் வராது” என்பது போல் தான் இருப்பதாக விமர்சனம் செய்தார்.







