திருவள்ளூர் அருகே பள்ளியின் சமையல் அறையில் அமர்ந்து மாணவர்கள் கல்வி பயின்று வருவதால் புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட அக்கரம்பேடு ராஜபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக் கட்டிடம் மிகவும் பழமையானதாகவும், எப்போது வேண்டுமானும் இடிந்து கீழே விழும் என்ற நிலையில் காணப்பட்டதாலும் இடிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்க போதிய வகுப்பறைகள் இல்லாத சூழல் ஏற்பட்டது.
கல்வி கற்க போதிய இடம் இல்லாததால் பள்ளியிலுள்ள சமையல் அறை கட்டிடத்தில் அமர்ந்து தினந்தோறும் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மாணவர்களின் பசியை போக்கும் சமையலறை தற்போது அறிவை புகட்டும் வகுப்பறையாக மாறியுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்களும், மாணவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.







