முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

மாநில உரிமைகளை கைவிட்ட மாநில கட்சிகள்


மரிய ரீகன் சாமிக்கண்ணு

கட்டுரையாளர்

பெட்ரோல் வரியை குறைக்காவிட்டால் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்பதா? என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் பேசிய பேச்சு மிக முக்கியமானது. இது, மறைமுகமாக மாநில உரிமைகள் பற்றிய உரையாடலுக்கு இட்டுச்செல்கிறது. அதாவது, கல்வி, வரி விதிக்கும் உரிமை, என்.ஐ.ஏ, என கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு மாநிலங்கள் மீதான அதிகாரத்தை அழுத்திப் பதித்துக்கொண்டு இருக்கிறது. அதாவது, கல்வி, வரி விதிப்பு, நிதி, நிர்வாகம் உள்ளிட்ட தளங்களில் மாநிலத்தின் உரிமையை விட மத்திய அரசின் உரிமைகள் செல்வாக்கு செலுத்துகின்றன. இது பற்றி தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக குரல்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவின் எஞ்சிய பல மாநிலங்கள் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. நீட் அறிமுகப்படுத்தப்பட்ட போது, க்யூட் அமலுக்கு வந்த பிறகு, காவல் துறையில் என்.ஐ.ஏ கொண்டு வரப்பட்ட பின்பும் சரி அது பற்றிய எதிர்கால விளைவுகளை மம்தா பானர்ஜி, ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரசேகர் ராவ், நிதிஷ் குமார், நவீன் பட்நாயக், பினராயி விஜயன் என மாநில முதலமைச்சர்கள் கண்டு கொள்ளவில்லை. குறைந்த பட்சம் அந்தந்த மாநிலங்களின் உரிமைகளை அது எப்படி பறிக்கிறது என்பது பற்றிய பிரக்ஞை இன்றியே இருக்கிறார்கள்.

பிரச்னை எங்கே தொடங்குகிறது?:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அரசமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது மத்திய பட்டியல், மாநில பட்டியல், பொதுப்பட்டியல் என்று பிரிக்கப்பட்டது. மாநில பட்டியலில், கல்வி, சட்டம், நிலம் போன்றவை அவசர நிலைக் காலத்திற்கு முன்பு வரைக் கூட மாநிலங்களில் கையில் தான் இருந்தது. அவசர நிலைக்காலத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றினார். காங்கிரஸ் கட்சியுடனும், ஜனதா கட்சியுடனும் பல முறை மாநில கட்சிகள் கூட்டணி வைத்திருந்தன. தனியாகவே கூட்டணி ஆட்சியையும் அமைத்தார்கள். ஆனால், மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு சென்ற கல்வி, சட்டம், நிலங்கள் உள்ளிட்ட விஷயங்களை வாபஸ் பெறுவதற்கு மாநில கட்சிகள் குறைந்த பட்ச செயல்திட்டத்துடன் கூடிய ஒப்பந்தத்தைக் கூட போடத்தவறி விட்டார்கள். அதாவது, பொதுப்பட்டியலில் இவை சென்றால் என்ன பாதிப்பு ஏற்படப்போகிறது என்ற சந்தேகம் நமக்கு எழலாம். ஆனால், ஒப்பீட்டளவில் இந்திய அரசமைப்பு சட்டமே மாநிலங்களை விட மத்திய அரசுக்கு சற்று கூடுதல் அதிகாரம் இருக்கும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலங்களில் உள்ள கல்வி, சட்டம், நிர்வாகம் உள்ளிட்டவை பொதுப்பட்டியலுக்கு செல்வதால், மத்திய அரசு கூடுதல் அதிகாரங்களைப் பயன்படுத்தி, மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது.

இதை கடந்த 45 ஆண்டுகளாக திரும்பப் பெறாததால், மாநில உரிமைகள் விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளன. நீட், கியூட் தேர்வுகள் கல்வித்துறையில் வந்துவிட்டது. வரி விதிக்கும் அதிகாரமும் மாநில அரசிடம் இருந்து மத்திய அரசு பெற்றுவிட்டது. இதையொட்டி தான், வாட் வரி, ஜி.எஸ்.டி வரி உள்ளிட்டவையும் வந்துள்ளன, இதில், வரி வசூலுக்கும் உரிமை மாநிலங்களுக்கு பெரிதாக இல்லாமல் போய்விட்டது. செஸ் வரியை மத்திய அரசு வசூலிப்பதால் கூடுதல் வரியை மாநில அரசு விட்டுக்கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பத்திரப்பதிவில் கூட இந்தியாவில் எங்கு வேண்டும் என்றாலும் பதிவு செய்யலாம் என்கிறது மத்திய அரசு. இதனால், கூட மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. காவல் துறையிலும் என்.ஐ.ஏ கொண்டு வரப்பட்டுவிட்டது. மொத்தத்தில், கல்வி, வரி விதிப்பு, காவல் துறை என அனைத்து துறைகளிலும் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இதை மாற்றி அமைக்க மாநில கட்சிகள் முயற்சிக்கவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றன. பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியிலேயே இந்த விவகாரங்களை பல மாநில கட்சிகள் சுறுக்கி அரசியல் படுத்தி வைத்துள்ளன.மத்திய – மாநில அரசுகள் சமமா?:
அரசியலமைப்பு சட்டத்தில், மத்திய – மாநில உறவுகள் பற்றிய பகுதி 245லிருந்து 255 வரைக்கு இருக்கும் சரத்துகள் நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் கொடுத்துள்ளது. இந்தியா முழுமைக்கு, இந்தியாவிற்கு வெளியிலும் சட்டம் இயற்றக்கூடிய அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டு தான் மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சரத்துகளை நுண்மையாக பார்க்கும் பொழுது மாநில அரசை விட மத்திய அரசுக்கான அதிகாரம் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. பலமான நாடு இருக்க வேண்டும் என்பதற்காக சட்ட மேதை அம்பேத்கர் இதை உருவாக்கினார். மாநிலங்களும் மத்திய அரசும் சமம் என்று சொல்ல முடியாது. சட்டம் இயற்றும் அதிகாரம், சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் மற்றும் நிதி நிர்வாக அதிகாரம் அனைத்துமே சமமாக இல்லை. அரசியலமைப்பு சட்டத்தின் அமைப்பே கொஞ்சம் மத்திய அரசுக்கு மேலாண்மை வழங்கும் அடிப்படையில் தான் உள்ளது. அதற்கு காரணம், ஒன்றுபட்ட இந்தியாவாக இருந்தால், நெருக்கடி நிலை, இந்தியாவில் உள்நாட்டு கலகங்கள், பொருளாதார நெருக்கடி போன்றவை வந்தால் அவை ஏற்படாமல் தவிர்க்க இந்த சட்டங்கள் உதவும் என்பதாக வைத்துள்ளனர். இப்படி தான் சட்டத்தின் வடிவமைப்பு உள்ளது. அதாவது, மத்திய அரசும் மாநில அரசும் சமமானவை இல்லை.நிதி, கல்வித்துறைகளில் மாநில உரிமைகள் பறிப்பு:
நிதி தொடர்பான உறவு குறித்து அரசமைப்பு சட்ட சரத்துகள் 263லிருந்து 300 வரை விளக்கப்பட்டுள்ளது. வரியை யார் விதிக்க வேண்டும்? எப்படி பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்? என்று விளக்கமாக கூறப்பட்டுள்ளது. நிதி பகிர்ந்தளிப்பு என்பது ஒரு திட்ட அடிப்படையில், நமது அரசமைப்பு சட்டத்தின் சரத்துகள் அடிப்படையில் நடக்கும். ஆனால், ஒரே நாடு ஒரே வரி, ஜி.எஸ்.டி இந்த மாதிரியானவை வரும் போது, மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டியை மத்திய அரசு வசூலித்துக்கொள்ளும், ஆனால், மத்திய தொகுப்பில் இருந்து பகிர்ந்து அளிக்கும் வகையில் அதை அமல்படுத்திவிட்டார்கள். அதனால், வரி வருவாய் இழப்பு மாநில அரசுகளுக்கு ஏற்படுகிறது. இதற்காக மாநில அரசுகளுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஈட்டுத்தொகை வழங்கு திட்டமும் உள்ளது. இந்த காலத்தை இன்னும் நீட்டிக்க வேண்டும் என்று இந்தியாவின் எந்த மாநிலங்களும் பேசவில்லை. தமிழ்நாடு தான் குரல் கொடுக்கிறது. விற்பனை வரி மூலம் கிடைத்த வரி வருவாய் முழுமையாக மத்திய அரசுக்கு சென்றுவிட்டது. 24 ஆயிரம் கோடி மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய ஈட்டுத்தொகை அதனால் தான் கிடைக்கவில்லை என்கிறார் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறுகிறார்.

விற்பனை வரி சட்டத்தின் கீழ் எடுத்துக்கொண்ட தொகை தான் தற்போது மத்திய அரசிற்கு செல்கிறது. சட்டத்தை வேண்டுமென்றால் ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வாருங்கள், மத்திய அரசிற்கு செல்லும் தொகை, ஏற்கனவே இருந்த நிலையில் கொண்டு வாருங்கள் என்ற கோரிக்கையை மாநில அரசுகள் எழுப்ப மறுக்கின்றன. அந்தந்த மாநிலங்களில் வரும் வருவாயை அந்தந்த மாநிலங்களே வைத்துக்கொள்ளலாம் என்ற முறை வரும் போது, நாம் கொடுக்கும் வரி நமக்கே வரும். இந்த நடைமுறை இல்லாதது அதிக வரி செலுத்தும் தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் இழப்பை சந்திக்கின்றன.
கல்வியின் அடிப்படை தரத்தை தீர்மானிக்கும் உரிமை மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆனால், இந்தியாவின் பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்களை பெரும்பாலும் மாநில அரசுகள் தான் நடத்துகின்றன. இதனால், மாநிலத்திற்கான உரிமைகளை பறிக்கும் வகையில் கல்வியில் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன. நீட், கியூட் உள்ளிட்டவற்றை இதன் பின்னணியில் பார்த்தால் தெளிவாக விளங்கும்.

பிரதர் மோடி – முதலமைச்சர் ஸ்டாலின் பரஸ்பர விமர்சனம்:
இந்த பின்னணியின் கண்ணோட்டத்தில் பெட்ரோல்-டீசல் விலையை புரிந்துகொள்ளலாம். கடந்த நவம்பர் மாதம் பெட்ரோலியப் பொருள்கள் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. மாநிலங்களையும் குறைக்கச் சொல்லி மத்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளம், ஜார்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மதிப்புக் கூட்டு வரியை குறைத்து மக்களுக்கு ஆதாயம் செய்ய வேண்டும் என பிரதர் நரேந்திர மோடி பேசியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அளித்த விளக்கத்தில், இதனை பற்றி நான் ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்று சொன்னால், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல், அவர் இந்த கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார் என தெரிவித்தார். வரி விதிப்பு உள்ளிட்டவற்றில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே உள்ள முரண்பாடான நடைமுறையும், மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரமுமே சிக்கலாக அமைந்துள்ளது.

பெட்ரோல் வரியை குறைக்காவிட்டால் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்பதா? என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜனின் சட்டப்பேரவை பேச்சையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. மொத்தத்தில், மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்களை மத்திய அரசிடம் இருந்து மீண்டும் பெறுவதன் மூலம் மட்டுமே இது போன்ற சிக்கல்களை தீர்க்க உதவும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடப்புக் கல்வியாண்டில் திருக்குறள் பாடமாக அறிமுகம்!

Gayathri Venkatesan

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: இன்று 945 பேருக்கு பாதிப்பு!

Halley Karthik

காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் ஒத்திவைப்பு!