மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் தொழில்முனைவோராக மாற வேண்டும் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டார்.
இந்தியத் தணிக்கையாளர் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா சென்னை கலைவானர் அரங்கத்தில் நடைபெற்றது. மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் காணொளி காட்சி வாயிலாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது காணொளி காட்சி வாயிலாகப் பேசிய பியூஷ் கோயல், “பெருமை மிகு தருணம் இது. உங்கள் பெயருக்குப் பின்னால் பட்டம் எழுதவுள்ளீர்கள். சமூகத்துக்காகவும், நாட்டுக்காகவும் சேவையாற்ற உள்ளீர்கள். இந்த ஆண்டு பண்டிகைகள் உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “படிக்கிற போது பண்டிகைகள் கொண்டாட முடியாத சூழல் இருந்திருக்கும். நான் படித்த காலத்தில் என் அறைக்குள்ளேயே தான் இருப்பேன் சாப்பிடுவதற்கு மட்டுமே வெளியே வருவேன். இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு குவிந்துள்ளது. உங்கள் கையெழுத்துள்ள ஒவ்வொரு ஆவணங்களும் மிக முக்கியமானது. நான் படித்த காலங்களில் பட்டமளிப்பு விழாக்கள் இருந்ததில்லை, சான்றிதழ் வீட்டுக்கே வந்துவிடும்.
இந்தியத் தணிக்கையாளர் நிறுவனம் இந்தியாவில் மட்டும் அல்ல பல்வேறு நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது. தற்போது தென் அமெரிக்காவில் மட்டும் கிளைகள் இல்லை. விரைவில் தென் அமெரிக்காவிலும் கால் பதிக்கும் என நம்புகிறேன். மாணவர்கள் பலர் நாட்டின் 75வது சுதந்திர தினத்தின் பிரதமர் உரையைக் கேட்டிருப்பீர்கள். அடுத்த 25 ஆண்டுகளில் நாடு முன்னேற்றம் அடையப் பல இலக்குகளை முன் வைத்தார். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும்.
பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் கவுன் அணியும் நடைமுறை மாற்றப்பட வேண்டும். நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதே நம்முடைய நோக்கம். மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் தொழில்முனைவோராக மாற வேண்டும் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாக மாற வேண்டும்” என்றார்.







