ஆந்திர கடலோரப் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக நகரின் முக்கிய பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் 9ம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்மேற்கு பருவமழை விலகிச் சென்று வரும் நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்துள்ளது. மேலும், இது ஆந்திர கடலோர பகுதியை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 9ம் தேதி வரை கனமழை நீடிக்கும் எனவும், தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வட தமிழ்நாடு மற்றும் உள் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







