இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸ் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் நீண்டகால அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில தினங்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர் கடந்த 8ம் தேதி இரவு காலமானார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து இங்கிலாந்தின் புதிய அரசராக 3-ம் சார்லஸ் அரியணை ஏறினார். சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் உயிரிழந்த இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். 74 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக பதவியேற்றுக் கொண்டார். அப்போது, முடிசூட்டு விழா குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு 74 வயதாகிறது. இதன்மூலம், இங்கிலாந்தின் வரலாற்றில் முடிசூட்டப்படும் மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில் மன்னர் சார்லஸ் அவரது மனைவியுடன் முடிசூட்டப்படுவார். அதைத்தொடர்ந்து, அரசராக அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும். பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்திக்கொண்டு மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும்.
பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். ராணி இரண்டாம் எலிசபெத் 1953 இல் முடிசூட்டப்பட்டபோது, 129 நாடுகளைச் சேர்ந்த 8,000 விருந்தினர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.