கோவை மாவட்டம் அவினாசி சாலையில் அமைந்துள்ள பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அரசு உதவி பெறும் கல்லூரி பல்கலைக்கழகம் ஆவதை எதிர்த்தும், ஆசிரியர்களின் பணி பளுவைக் குறைக்கும் வகையில் காலியான பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மூன்று நாட்களாக கருப்பு கொடிகளையும், கோரிக்கை பதாகைகளையும் ஏந்தி, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில், மாணவர்களும் திடீரென்று கல்லூரியின் நுழைவாயிலில் திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்கல்வி தனியார் மயமாவதை தடுத்து, மாணவர்களிடம் கூடுதல் கட்டணங்கள் வசூல் செய்வதை தவிர்க்க வேண்டும்; 70 ஆசிரியப்பணி இடங்கள், 42 அலுவலக பணியாளர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதை உட்பட பத்து கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் 4 மணி நேரமாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இன்னும் பல கல்லூரிகள் இதுபோல் தனியார் மயமாக்க திட்டமிட்டு உள்ளது எனவும், இப்படியே சென்றால் ஏழை மாணவர்களின் நிலைமை என்னவாகும் எனவும் மாணவர்கள் கருத்து தெரிசித்தனர்.
– தீபா, மாணவ ஊடகவியலாளர்








