கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கு தொடர்பாக கொலையாளி சதீஷின் செல்போனை ஆய்வு செய்த சிபிசிஐடி போலீசார் , அவரது நண்பர்கள் உள்ளிட்ட பலரிடம் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சென்னை ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் தலைமைக் காவலர் ராமலட்சுமியின் மூத்த மகள் சத்யா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு ரயிலில் ஏறிச்செல்ல முயன்றபோது அருகில் நின்று கொண்டிருந்த சத்யாவின் நண்பரான சதீஷ் திடீரென ரயிலில் தள்ளிவிட்டதில் தலை துண்டித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் கொலையாளி சதீஷை உடனடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷிடம் ஒருவாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். சிபிசிஐடி ஆய்வாளர் ரம்யா மற்றும் பெண் போலீசார் ஆலந்தூர் காவலர் குடியிருப்பிற்கு சென்று அங்கு வைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அங்கு வசித்துவரும் மற்ற காவலர் குடும்பங்களிடமும் விசாரணை நடத்தினர்.
மேலும் படுகொலை சம்பவம் நடந்த பரங்கிமலை ரயில்வே நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளையும் கைப்பற்றிய போலீசார், சத்யா தள்ளிவிடப்பட்ட சம்பவத்தை ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தின் போது சத்யா விழுந்து இறந்த மின்சார ரயிலை ஓட்டிவந்த ஓட்டுநர் கோபாலிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட சதீஷின் செல்போனை கைப்பற்றிய போலீசார், அதில் கொலையான சத்யாவிடம் கடைசியாக எப்போது பேசினார்? இருவரது பேச்சுக்கள், உரையாடல்களை சதீஷ் பதிவு செய்துவைத்துள்ளாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர். தொடர்ந்து சதீஷின் வாட்ஸ் அப் குழுவில் உள்ள நண்பர்கள் மற்றும் குழு உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதேபோல மாணவி சத்யாவின் கல்லூரி நண்பர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே சத்யா படித்த கல்லூரிக்கே சென்று, சதீஷ் தகராறு செய்ததை, மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதும், பரங்கிமலை காவல் நிலையத்தில் மாணவி சத்யாவின் தாயார் ராமலட்சுமி பலமுறை புகார் கொடுத்த போதும் போலீசார் விசாரணைக்கு அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஆனால் சத்யாவை தாக்கிய சதீஷ் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பரங்கிமலை காவல்துறையினரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளனர்.
சதீஷின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டதும், அவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானதாலும், அவரிடம் இருந்து சத்யா விலகத் தொடங்கியுள்ளார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்து சத்யாவை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே ரயில் நிலையத்திற்கு சதீஷ் வந்ததை சிபிசிஐடி போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். தானும் உயிரிழப்பு கொள்ள திட்டமிட்டதாக சதீஷ் கூறியிருப்பது குறித்தும் விசாரணை நடத்த உள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவரை போலவே சதீஷ் நடந்துகொள்வார் என அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சதீஷ், தான் குடிக்க பணம் கேட்டு தரமறுத்தால், உடனே அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதும், அவர் கஞ்சா போதைக்கு அடிமையானதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காதலும் பறிபோனதால் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்று இந்த கொலை சம்பவதில் ஈடுபட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.








