பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் முன் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக குடியிருப்பு பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13ம் தேதி மாணவி ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. முதற்கட்டமாக நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் சென்னை டிஎஸ்பி செல்வகுமார், புருஷோத்தமன் தலைமையிலான 5 பெண் ஆய்வாளர்கள் சம்பவ இடமான சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தடவியல் துறை வல்லுனர்களை வரவைத்து தடயங்களை சேகரித்தும் சத்யாவின் தாயார் ஏற்கனவே மாம்பலம் மற்றும் பரங்கிமலை காவல் நிலையத்தில் குற்றவாளி சதீஷ் மீது புகார் அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாம்பலம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனை பிரிவு 75 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. பரங்கிமலை காவல் நிலையத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் சமரசம் மட்டுமே பேசி அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து நேற்று மாம்பலம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகி இருந்தது. அதில் தன் மகள் சத்யா தாக்கியதாக புகார் அளித்த நிலையில் வெறும் வாய் தகராறு ஏற்பட்டதாக பிரிவு 75ன் கீழ் மட்டுமே மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் 2வது நாளாக இன்று இரண்டு காவல் நிலையங்களிலும் புகார் அளித்தும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று பரங்கிமலை காவல் நிலையத்திலும் சத்யா வசித்த காவலர் குடியிருப்பில் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மாணவியின் தாய் ராமலட்சுமி, சத்யாவின் தோழிகள் மற்றும் சம்பவத்தன்று ரயிலை இயக்கிய ஓட்டுனர் கோபால் என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







